கடவுளின் பினாமி
என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். கண்டிப்பாக மறக்கவே கூடாத ஒரு நாள். பசி, பயம், தாகம், எதிர்பார்ப்பு, ஏக்கம், ஏமாற்றம், பரிதவிப்பு, களைப்பு, சுமை, நீண்ட நடைப் பயணம் என இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டாலே என்னவோ மாதிரி இருக்கிறது அல்லவா? அதை அனைத்தையும் நடைமுறையில், அதுவும் ஒரே நாளில் அனுபவித்தால் எப்படி அந்த நாளை மறக்க முடியும்? கூறுகிறேன் கேட்டுவிட்டு சொல்லுங்கள் அந்த நாளை மறக்கு முடியுமா என்று. அந்த நாள் 26-12-2004. ஞாயிற்றுக்கிழமை.
***************
அதிகாலை 5 மணி.
வளத்தான்பட்டினம் கிராமம். மாமன்னன் “கரிகால் சோழ பெருவளத்தானால்” நிர்மானிக்கப்பட்ட சிற்றூர். தன் தலைநகர் பூம்புகார் கடற்கரையை ஒட்டின ஊர் என்பதால் தன் பெயரோடு பட்டினத்தை சேர்த்து வளத்தான்பட்டினம் என்று வைத்திருப்பான் என்பது எங்களின் செவி வழி பெயர்க்காரண துறுப்பு.
அதவிடுங்க அன்னிக்கி காலையிலயே எல்லாரும் வீட்டுல சீக்கிரமே எழுந்திருச்சிட்டோம். ஏன்னா ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க வீட்டுல அன்னிக்கு கறி எடுக்கலாம்னு எங்கப்பா ராத்திரியே சொல்லிட்டு படுத்துட்டாரு. அதனாலேயே என்னவோ ராத்திரி பூரா பொரண்டு பொரண்டு படுத்த மாதிரிதான் இருந்தது. அதுக்குள்ள பொழுது விடிஞ்சி போச்சி. இந்த அறைகுறை தூக்கத்துல வேற கறிக்கொழம்பு சாப்புடுற மாதிரியும், அதுல நான் எங்க அக்காக்கிட்ட சண்டைப் போடுற மாதிரியும் கனவு. எல்லாம் சரியா ராத்திரி தூங்கப் போற நேரத்துல எங்க அப்பா நாளைக்கு கறி எடுக்கலாம்னு சொன்னதுதான் காரணம். எனக்குதான் அப்படின்னா எனக்கு மேல எங்க அண்ணன். எனக்கு முன்னாடியே எழுந்திரிச்சி உடற்பயிற்சியெல்லாம் செஞ்சிக்கிட்டிருக்கான். பொதுவாவே அவரு எப்போதுமே எங்கப்பா காலையிலேயே 5 மணிக்கு பால் வியாபாரத்துக்கு போகும் போதே எழுந்திருச்சிருவாரு. எழுந்து எங்க பக்கத்து ஊரான கருவிழந்தநாதபுரம் வரைக்கும் ஓட்டம் ஓடிட்டு வந்து கல்லையும் கட்டையையும் தூக்கிட்டு கிடப்பாரு. காரணம் அப்போ போலீஸ் ஆவறதுக்காக முழுமூச்சா பரிட்சை எழுதி பாஸ் ஆயிட்டு உடற்தேர்விற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். வழக்கத்திற்கு மாறாக நான்தான் அன்னிக்கு சீக்கிரம் எழுந்துவிட்டேன்.
எப்போதும் வாரம் தவறாமல் எங்கள் அப்பா கறி எடுத்து வந்துவிடுவார் என்றாலும் ஒருமாத காலமாக அண்ணன் வீட்டில் இல்லாமல், கல்லூரியின் மூலமாக தேசியர் மாணவர்படை கேம்பிற்கு சென்று விட்டு வந்ததனால் கறி எடுக்கவில்லை. காரணம் எங்கள் வீட்டில் ஒருவர் குறைந்தால் ஒருவரை விடுத்து ஒருவர் இதுமாதிரியான விN~ச சாப்பாடு சாப்பிட மாட்;டோம். அப்படி சிறு வயதிலிருந்தே எங்களை எங்கள் அம்மா வளர்த்து வைத்திருந்தாள். அப்படி விட்டுவிட்டு சாப்பிடுவது கொலை குத்தமாய் எங்களுக்கும் மனதில் பதிந்துவிட்டது. அது மட்டுமல்ல எங்கள் வீட்டில் கொஞ்சம் அதிகமாகவே ஆஸ்திக நம்பிக்கை உண்டு என்று சொல்ல வேண்டும். அதுதான் தவறாமல் கறி எடுப்பதை தவிர்த்து வரும் மிகப் பெரிய காரணி. மேலும் சிறுவயதிலிருந்தே எங்களுக்கு ஐயப்பன் பக்தி கொஞ்சம் அதிகம். காரணம் எங்கள் ஊரிலேயே முதன் முதலாக சபரிமலைக்கு சென்று குருசாமி ஆனவர் எங்கள் அப்பாதான். ‘பால்காரர் செல்லதுரை குருசாமி’ என்றால் எங்கள் பகுதியில் பிரபலம். அதனால்தான் என் பெயர் கூட ‘மணிகண்டன்’; அதுவும் ‘செல்லமணிகண்டன்’ என்று வைத்தார்.
அப்படி இருக்கையில் கார்த்திகை மாதத்தில் நாங்கள் ஐயப்பனுக்கான விரதத்தில் இருப்போம். என்னவோ காரணம் தெரியவில்;லை என் தந்தையால் அந்த வருடத்தில் மாலை அணிய இயலவில்லை. மேலும் என் அண்ணன் தவறாமல் பிரோத~ விரதம் எடுத்து வருவார். உடல் பலத்திற்கும் உள்ள பலத்திற்கும் இதுமாதிரியான விரதங்கள் பங்கெடுக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சிறுவயதிலேயே எனக்கும் எனது அக்காவுக்கும் கூட ஒரு விரத தினத்தை கடைப்பிடிக்க அம்மா பழக்கப்படுத்தியிருந்தாள். எனக்கு முருகனின் அருள்கிட்ட கார்த்திகை விரதம். என் அக்காவிற்கு விநாயகனின் சாதுர்யம் கிட்ட சங்கடஹர சதுர்த்தி. எப்படியும் மாதத்திற்கு இரண்டு பிரதோ~ம், தலா ஒருமுறை கார்த்திகையும் சங்கடஹர சதுர்த்தியும் வந்துவிடும் என்பதால் அந்த நாட்களில் எல்லாம் மாமிசம் அறவே கிடையாது. பற்றாக்குறைக்கு எங்கம்மா பங்கிற்கு மருவத்தூர் ஓம் சக்திக்காக வெள்ளிக்கிழமை விரதம் வேறு! எனவே விரதம் இல்லாத ஞாயிற்றுக் கிழமையை எண்ணித்தான் நாங்கள் அப்பொழுதெல்லாம் காத்திருப்போம்.
ஆனால் ஒன்று அதுமாதிரி விரத காலங்களில் மாமிசத்தின் நினைப்பு அறவே வராது. வந்ததும் இல்லை. சாதாரண தினங்களில் அது எங்கிருந்தோ கிளம்பிவிடும் என்றுதான் சொல்ல வேண்டும். பசி என்பது மனிதனின் அடிப்படை உணர்ச்சி என்றாலும் ருசி என்பது அடுத்தக்கட்டமாக அத்தியாவசியம் ஆகி விடுகிறது. பாவம் நாங்களோ பள்ளிக்கூடத்து பிள்ளைகள். என்ன செய்ய முடியும். இப்படி பல தடைகளை கடந்துதான் இந்த முறை கறி எடுக்க எனது தந்தை முடிவு செய்திருக்கிறார்.
அப்பா வியாபாரத்திற்கு கிளம்பியதும் கூடவே நானும் அண்ணனும் கையில் வயர் கூடையுடன் சைக்கிளில் கிளம்பினோம். அப்பாவின் பால் வண்டி சைக்கிள் மிதியலுக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும் பின் தொடர்ந்து சென்றோம். அப்பா எங்களுக்காவே மிதமான வேகத்தில் சென்றதாக தோன்றிற்று. விரைந்து மூவரும் கருவிழந்தநாதபுரத்தை அடைந்தோம்.
**************
விடியற்காலை 5.30 மணி.
பனிவிலகிடாத நேரம். மார்கழி மாதத்தின் பயங்கரமான குளிர்வேறு. அப்பா தனக்கான பாணியில் சர்ரென்று சைக்கிளைவிட்டு இறங்கி இருந்த குளிருக்கு இதமாய் ஒரு டீக்கடையின் உள்ளே சென்றார். நாங்களும் சென்றோம். மூவருக்கும் டீ சொன்னார். அண்ணன் டீ வேணாம் என்று விட்டான்;. அவர்தான் ஏற்கனவே உடற்பயிற்சி செய்து உடலை சூடுப்படுத்தி வைத்திருந்தானே! எனக்கு அப்படியில்லை வாங்கி குடித்தேன். ஆரம்பத்தில் குளிரில் நடுங்கிய உதடுகள் டீயின் சூடுப்பட்டதும் இதமாய் உணர்ந்தன.
அப்படியே அங்கிருந்து புறப்பட்டு குரங்குப்புத்தூருக்கு சென்றோம். அங்குதான் அப்பா பால் எடுக்கும் இடமும் துவங்கும். மேலும் நாங்கள் கறி எடுக்க வேண்டிய கடையும் அங்குதான் இருந்தது. பொதுவாகவே கோழிக்கறி என்றால் ஒன்று புஞ்சை கிராமத்திற்கு இல்லையென்றால் கருவிக்கு செல்ல வேண்டும். இன்று அம்மா கோழிக்கறி வேண்டாம், ஆட்டுக்கறிதான் வேண்டும் என்றதால் இங்கு வந்தோம். வழக்கமாக அப்பா கறி எடுக்கும் கடைதான் அது என்றாலும் கறிக்கடைக்காரர் அப்பாவை பார்த்து “என்னா பால்காரரே! ரொம்ப நாளா ஆள காணோம்” என்றார்.
“இல்ல… பையன் ஊருல இல்ல. பசங்க வந்துருக்கானுவ இளம் ஆட்டுக்கறியா பாத்து ஒரு ரெண்டு கிலோவும், ஒரு ஆட்டு ரத்தமும் கொடுத்து வுடுங்க. நான் வரப்ப காசு தரேன்” என்றதும் கடைக்காரர் எங்களை எட்டிப்பார்த்தார்.
உடனே அப்பா “போதும்ல. அப்புறம் இந்தா, இந்தா ரூபாய வச்சிக்கோ. இல்லாத ஜாமன் குழம்புக்கு வாங்கிக் கொடு” என்று சொல்லி தன் வயர் கூடையிலிருந்து பொறுக்கி இருந்த பணத்தை அண்ணனிடம் கொடுத்துவிட்டு, பின் தனக்கே உரித்தான பாணியில் சைக்கிளைத் தள்ளி ஒரே உந்தலில் சைக்கிளில் ஏறி பால் ஹாரனை அழுத்திக் கொண்டே புறப்பட்டார். “தேகூம்… தேகூ... தேகூம்… தேகூம்… தேகூ... தேகூம்…” அப்பா அடிக்கும் பால் வண்டி பலூன் ஹாரன் எனக்கு அப்படிதான் கேட்கும்.
சிறிது நேரத்தில் கடையில் கூட்டமும் கூடிவிட்டது. கடையில் பார்த்தால் இரண்டு ஆடுகள் உறித்துத் தொங்கவிடப்பட்டுள்ளன. பத்தாததற்கு மூன்று ஆடுகள், உயிரோடு மரண பீதியில் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு ஆட்டை கத்தியால் படுக்க வைத்து குரல்வளைக்கு நேர் அறுத்து எறிகிறார். அந்த ஆடு துடிக்கிறது. இவ்வளவு காட்சியும் அரங்கேறிக் கொண்டே இருக்க கூட்டம் ஒருபுறம் வந்து சேர்ந்துக் கொண்டுதான் இருந்தது.
கூட்டத்தில் நாங்கள் நிற்கின்ற இடமும் கறி வெட்டுபவர்களின் பார்வையில் இருந்து மறைந்துக் கொண்டே போனது. அப்பா சென்று வெகுநேரம் ஆகிவிட்டது. எங்களுக்கான கறி வந்தபாடில்லை. பொறுத்திருந்தது போதும் என்று ஒரு வழியாக அண்ணன் கூட்டத்தினுள் நுழைந்து தலைக்காட்ட, “ஏப்பா இந்த பால்காரர் பையனுக்கு இன்னும் நீ போடலையோ! கொஞ்சம் பொறுத்துக்க தம்பி தோ, அந்த ஆட அறுக்கட்டும் மொத கறி ஒனக்குதான். ஒங்களுக்கென்ன ரெண்டு கிலோ கறி. ஒரு ரத்தம் அவ்வளவுதான?” என்றார் மிக சுலபமான வார்த்தையில். எங்களுக்கு நிம்மதி பிறந்தது. அப்பாடா! இப்பயாச்சும்; நம்பள கண்டுக்கிட்டாரே மனு~ன். இது மாதிரியான கறிகடைகளில் அதிகம் கறி எடுப்பவர்களுக்கும், அடிக்கடி கறி எடுப்பவர்களுக்கும்தான் முன்னுரிமை கிடைக்கும் என்பதெல்லாம் பின்னாளில் கிடைத்த அனுபவ ஞானம்.
அப்படியும் கிட்டத்தட்ட அடுத்த ஒரு மணிநேரம் ஆகித்தான் எங்களுக்கான கறி கைக்கு கிடைத்தது. ஒருவழியாக கிடைத்த கறியை எடுத்துக் கொண்டு பயண நேரத்தை குறைக்க எண்ணி நானும் பின் கேரியரில் உட்கார்ந்துக் கொண்டு சேர்ந்து பெடல் போட ஆரம்பித்து வேகமாக வீட்டிற்கு போய்ச் சேர்ந்தோம். நன்கு பனிவிலக சூரியனும் தலைத்தூக்க ஆரம்பித்து இருந்தான். புல்வெளிகளில் பனித்துளியும் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்தன. அவசர அவசரமென சில வண்ணத்துப் பூச்சிகள் சாலையோரம் புதிதாய் பூத்திருந்த தும்பை பூவில் தேனெடுத்துக் கொண்டிருந்தன.
**************
சரியாக காலை 7 மணி.
வீட்டிற்கு வந்தால் அவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு அம்மா அப்பொழுதுதான் கொள்ளை வேலைக்கு மாடுகளை கொண்டு மேனகா வீட்டு கொள்ளையில் கட்டிவிட்டு சென்றுவிட்டாளாம். ஆகவே இன்று கொழம்பு எங்க அக்காவின் கையால் வைக்க வேண்டும். அவளும் சிறு வயதிலிருந்து சமைப்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்ததால் மிக நுணுக்கமான சமையல் முறைமைகளை சுவையை கூட்ட கத்து வைத்திருந்தாள். தள்ளாடும் வயதிலானாலும் பாட்டியும் உதவி செய்வாள். ஆனால் சில மாதங்களாகவே பாட்டிக்கும் கண், காது, கால் என உடல் பிரச்சனை பெரியதாகி ஒரே இடத்தில முடங்கிவிட்;டாள். பொதுவாகவே எங்கள் வீட்டில் அம்மா ரசம், கீரை, மீன் கொழம்பு, காரக்குழம்பு இவைகளை சமைப்பதில் வல்லவள். அக்கா சாம்பார், அசைவம் சமைக்க பெயர் போனவள். எனவே பாட்டியின் உதவியின்றி இன்று அவளுடைய கைப்பக்குவம்தான் கை கொடுத்தாக வேண்டும்.
ஆக அம்மா இருந்தாலும் அக்காதான் அம்மாவின் உதவியோடு சமைத்திருப்பாள். ஆனாலும் அந்த கறியை ஆய்ந்து சுத்தப்படுத்துவதில்தான் அவளுக்கு சிரமமம். இருந்தால் என்ன இன்றுதான் நாங்கள் இருக்கின்றோமே என்று நானும் அண்ணனும் சமையல் உதவிகளை செய்ய பெரிய விருந்துக்கான ஏற்பாடுபோல் கறிக்கொழம்பு தயாராகிக் கொதித்துக் கொண்டிருந்தது.
**********
காலை மணி 8.30.
கறிக்கொழம்பு, வறுத்தக் கறி, பொறித்த ரத்தம், மோர் வெங்காயம், மிருதுவான அரிசியில் சாப்பாடு எல்லாம் தயார். வீட்டில் இலைப்போட்டு முன்னோர்களுக்கு நீர்மாத்தி விட்டால் சாப்பிட வேண்டியதுதான். அக்கா “அம்மா அப்பா வரும்வரை காத்திருக்கலாம்டா” என்று சொன்னாள். பெண் பிள்ளையாயிற்றே! ஆனால் எங்களுக்கும் சமைக்கும் முன்பு வரை அப்படித்தான் தோனிற்று. எப்பொழுது குழம்பின் வாசத்தை நாசியில் நுகர்ந்தோமோ அப்பொழுதே அந்த யோசனையெல்லாம் மறந்துவிட்டது. பசி வந்தால்தான் பத்தும் பறந்துவிடுமே! எங்களுக்கு பந்த பாசமெல்லாம் பறந்துவிட்டது. சரி சாப்பிடலாம் என்று தட்டை கழுவிக் கொண்டு அக்கா எடுத்து வந்தாள். அவ்வளவுதான்!
எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை அந்த கூக்குரல். அப்படி ஒரு நடுக்கம், பதட்டம், பரிதவிப்பு, பாதுகாப்பின்மை. அக்குரல் அமைதியாய் இருந்த ஊரையே கிடு கிடுக்க வைத்தது என்று கூட சொல்லலாம். காரணம் சாலையின் ஓரமாக தெருவின் முதல் வீடாக இருக்கும் நாங்கள் குரலின் பாவத்தை கணித்து வெளியில் வருவதற்குள் தெருவே அந்த குரலை நேரில் காண திரண்டுவிட்டது. வெளியில் வந்துப் பார்த்தால் சாலையெங்கிலும் ஒரே மக்கள் வெள்ளம் போய்கொண்டு இருக்கிறது. அந்த மக்கள் வெள்ளம் அனைத்தும் சொன்ன வாக்கியம் “தப்பிச்சு போயிடுங்க! தப்பிச்சு போயிடுங்க!”.
அவர்களைப் பார்த்தால் ஒன்றுமே விளங்கவில்லை. தங்களுக்கு கிடைத்த ஏதேதோ மீன் வண்டிகளில் அமர்ந்திருந்த மீனவ மக்கள் என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அனைவரும் ஆள்பாதியும் ஆடைபாதியுமாகவேத்தான் இருந்தார்கள். முழுமையான உடை அணிந்திருந்தவர்கள் யாருமே இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் அவசரத்தில் கிளம்பி வண்டியில் ஏறியவர்கள் போல் இருந்தனர். அதற்குள் மக்களை கண்ணீரும் கம்பளமாக அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அனைவரின் குரலும் எங்களை பார்த்து சொல்வதெல்லாம் ஒன்றுதான் “ஏன் நிக்குறீங்க? தப்பிச்சு போயிடுங்க! கடல் பொங்கி வருது!” என்றதும்தான் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்கவே முடிந்தது.
“ஆஹா, கடல் பொங்கி வருகிறதா!” என்று அவர்கள் கண்ணீரும் கம்பளுமாக சொன்னதை யாராலும் நம்பாமல் இருக்க முடியவில்லை. எங்கள் தெருவும் ஆட்டம் கிளம்பிவிட்டது. பதட்டத்தில் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேலைக்கு சென்ற அம்மா ஒருபுறம், வியாபாரத்திற்கு சென்ற அப்பா ஒருபுறம். அதிலும் அப்பாவை நினைத்தால் இன்னும் பீதி அதிகமாகிறது. காரணம் அப்பா பால் வியாபாரத்திற்கு சென்றிருப்பது பூம்புகாரை ஒட்டிய கடற்கரை கிராமத்திற்குத்தான். பொதுவாக அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு வர மதியம் 12 மணியைத் தாண்டிவிடும். மணியோ இப்போது 9 மணிதான் ஆகிறது சரியாக அந்த கடற்கரை கிராமத்தில் அல்லவா அப்பா இருந்திருப்பார். எங்களுக்கு அழகலும் ஆத்திரமும் அடைத்துக் கொண்டு வந்தது.
பூம்புகாரிலிருந்து சரியாக 9 கிலோ மீட்டருக்கு மாயவரத்தை நோக்கி செல்லும் மேற்கு போக்கிலிருக்கும் சாலையோரத்தில் எங்கள் வீடு வளத்தான்பட்டினக் கிராமத்தில் சாலையை நோக்கி தெற்கு பார்த்து அமைந்திருக்கிறது. ஆகவே எப்படியும் கடல் பொங்குகிறதென்றால் அதற்கு இவ்வளவு பெரிய தூரம் எம்மாத்தத்திற்கு! யோசித்து பார்க்ககூட நேரமும் இல்லை. முடியவும் இல்லை. சரி, அப்பா வருவதற்குள் நாம் வீட்டை விட்டு கிளம்புவதற்கு தயாராகிவிட வேண்டுமென்று இருக்கிற கல்விச் சான்றிதழிகளை மட்டும் ஒரு பெட்டியில் எடுத்து கொண்டு, மாடுகளையும் ஆடுகளையும் அவிழ்த்து விட்டுவிட்டால் நீந்திப்பிழைத்துவிடும் என்ற எண்ணத்தில் அனைத்தையும் அவிழ்த்துவிட்டுவிட்டு புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தோம். அதற்குள் வேலைக்கு சென்றிருந்த அம்மாவும் வந்துவிட்டாள். இன்னும் அப்பாதான் பாக்கி சாலையிலேயே நின்று கொண்டிருந்தோம். அதற்குள் அகதிகள் கூட்டம் மாதிரி கடற்கரைப் பக்கத்திருந்த அடுத்த 9 கிலோ மீட்டர் தூர மக்கள் எங்கள் வீட்டின் சாலை வழியே கடந்துப் போய்கொண்டே இருக்கின்றனர். அப்பாவை மட்டும் காணவில்லை.
*************
காலை 10 மணி.
அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் ஒரு கடிகாரம் இருந்தது. சரியாக எத்தனை மணியோ அத்தனை மணி ‘டொய்ன்’ ‘டொய்ன்’ என்று அடிக்கும். அப்படி அடித்த பத்தாவது மணிக்கெல்லாம் அப்பா வந்துவிட்டார். அப்பாடா நின்று போயிருந்த இதயம் அப்போதுதான் துடிக்க ஆரம்பித்தது. சரியென்று அவசர அவசரமாக கிளம்பினோம். அப்பாவின் பால் வண்டியில் பெட்டியை வைத்துத் தள்ளிக் கொண்டு அந்த அகதிகள் கூட்டத்தில் ஐக்கியமானோம்;.
உலகம் அழியப்போகிறது என்ற முடிவு எங்களுக்கு முழுமனதாக கடற்கறையிலிருந்து வந்தவர்கள் சொன்னதில் ஊர்ஜிதமானது. பத்தாதற்கு அங்கிருந்து வருபவர்கள் இதோ குரங்குபுத்தூர்வரை (காலையில் கறி எடுக்க சென்ற இடம்) கடல் வந்துவிட்டது, இல்லை இல்லை கருவி வந்துவிட்டது (காலை டீ குடித்த ஊர்) அடுத்து வளத்தான்பட்டினம்தான் என்றார்கள்.
போச்சடா நமது வீடு, வாசல் எல்லாமே! உயிர் மட்டும் பிழைத்தால் போதும் என்ற நினைப்பில் ஊரே சென்றுக் கொண்டிருந்தது. நாங்களும் சென்றோம். இப்படியே புஞ்சை மேலக்காவேரி வரை சென்றோம். அதற்கு மேல் எங்களால் நடக்க முடியவில்லை. திரும்பி வந்து கிடாரங்கொண்டான் ரைஸ்மில்லிலேயே உட்கார்ந்துவிட்டோம். இப்படியே போய்கிட்டிருந்த கூட்டம் ஒரு பக்கம் போய்கிட்டு இருக்க கொஞ்சம் பேரு அடுத்தடுத்த ஊர்களிலேயும் தங்க ஆரம்பித்தனர். இப்படியே சூரியன் மறைஞ்சி இருட்ட ஆரம்பித்தது. பாதிப் பேரு நடந்தே பதினாரு கிலோமீட்டர் போயி மாயவரத்தில் அரசாங்கம் அமைத்திருந்த முகாம்ல தங்கிவிட்டர்கள். பாதிப்பேர் வேறு ஊருக்கு சொந்தக்காரர்கள் வீ;ட்டுக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சாய்ந்தரம் வரை அங்கேயே இருந்துவிட்டு திரும்பி வீடு நோக்கியே புறப்படும்படி ஆனது. காரணம் நடக்க முடியாத வயதான எங்கள் பாட்டியை எங்களுடன் நாங்கள் அழைத்து சென்றிருந்ததுதான். மெல்ல நடந்து அப்படியே வீடு திரும்பினோம். எங்கள மாதிரியே திரும்பி சிலர் எதிர் திசையிலும் நடந்தார்கள். அவரவர்களும் ஏதோ கடலைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தோம். பல வதந்திகள். பல கற்பனைகள். பல முன் கணிப்புகள். எல்லாம் பாட்டி சிறுவயதில் சொன்ன பூதக்கதைகளை ஒத்தவையாக இருந்தன. அமானு~;யங்களை விழுங்கி இருந்தன. பாட்டியிடம் கேட்பதுபோல் எதிர் கேள்விகள் கேட்கமுடியாமல் போனாலும் கேட்பதற்கு ஆர்வமாயிருந்தன. சிறிது நேரத்தில் நடையும் கதையும் நீண்டு கொண்டிருக்க வேண்டாம் என்றது உள்மனம். இருள் சூழும் நேரம் வீட்டை வந்தடைந்தோம்.
***********
மாலை 6 மணி.
வீட்டிற்கு வந்து பார்த்தால் ஒரே அதிர்ச்சி வீடு திறந்திருக்கிறது. எங்கள் வீட்டில் அடுத்தடுத்த ஊர்மக்கள் வந்து தங்கி இருக்கிறார்கள். சரி என்று உள்ளே நாங்கள் நுழைந்ததும் எங்களை யாரும் வீட்டின் சொந்தகாரர்களை போலவே பார்க்கவில்லை. தங்களைப் போலவே எங்களையும் பாவித்து ஒருவர், “என்ன ஊருங்க நீங்க? இந்த வீடு நல்லவேளை தொறந்து இருந்துச்சு. அவசரத்துல பூட்டாம போயிட்டாங்க போலெருக்கு. அது நல்லதா போயிடுச்சி. பசங்கல கடல் பொங்குன அவசரத்துல சாப்டாம அழைச்சிட்டு வந்ததால, பசி பசின்னு கதறிச்சுங்க. நல்லவேளை சாப்பாடு இங்க சமைச்சே இருந்தது. புண்ணியவான் நல்லா இருக்கட்டும் பசிப்பிணி அண்டாமா. அதவிடுங்க நைட்டுக்கு சமைக்கலாம்னு இருக்கோம். நீங்க எத்தனப் பேருன்னு சொன்னீங்கன்னா சேர்த்து உலையில அரிசி போட்டுடலாம்” என்று சொல்ல அவனுக்கு பசி என்ற உணர்ச்சியே அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பசி ஞாபகத்திற்கு வந்ததும் காலையில் எடுத்து வைத்த கறிக்கொழம்பும் வர முந்திக் கொண்டு அடுப்பங்கரையை எட்டிப்பார்த்தேன். அந்த சட்டிகள் கழுவி கவுக்கப்பட்டிருந்தன. அதற்குள் மின்சாரம் வந்தவிட்டது. பளீர் என்று மின்விளக்குகள் ஆன் ஆனதும் கண்கள் கூசின. உட்கார்ந்து இருந்தவர்களில் ஒருவர் எழுந்துப் போய் தன் வீட்டு தொலைக்காட்சிப்போல் ஆன் செய்து ரிமோட்டை எடுத்து செய்தி சேனலைத் தேடி வைத்தப்படியே, “ஏன் சார் நிக்குறீங்க, உட்காருங்க நியூஸ்ல என்ன சொல்றான்னுதான் பார்ப்போம்” என்றார்.
எதுவும் சொல்ல முடியாமல் தொலைக்காட்சியை பார்க்க, “இன்று காலை தமிழகத்தை உலக்கிய ராட்சத அலைகளுக்கு பெயர் ஜப்பானிய மொழியில் சுனாமி என்று பெயர்” என்று விளக்கி எங்கோ பிடிப்பட்ட வீடியோவை திரும்ப திரும்ப போட்டு காண்பித்துக் கொண்டிருந்தனர்.
அதற்குள் அம்மாவும் அப்பாவும் பாட்டியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்து தொலைக்காட்சி பார்க்கும் கூட்டத்தோடு ஐக்கியமாகிவிட்டனர். அவனுக்கு கடுப்பாய் இருந்தது. மறந்திருந்த பசி அம்மாவை பாhத்ததும் இன்னும் அதிகமானது போல் இருந்தது. அம்மாவோ டீவி பார்ப்பதில் மும்முரமாகிவிட்டாள். காலையில் விட்டு சென்ற கறிகுழம்பின் வாசம் நாசியிலேயே நின்று கொண்டிருந்தது. வந்த கோபம் அதை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும் வெளிப்படுத்த முடியாமலாகி சாந்தமானது.
எது எப்படியோ கோபம் அந்த கடவுளின் மீதும் கடலின் மீதும்தான் திரும்பியிருந்தது. இருந்ததுதான் இருந்தது இன்னும் ஒரு அரை மணிநேரம் கழிச்சி பொங்கிருக்க கூடாது என்றது உள்மனம். நீங்களே இந்த நியாத்த கேளுங்க காலையிலேருந்து எவ்வளவு ஆசை ஆசையா சாப்பிட இருந்த எங்கள இப்படி அநியாயமா கெடுத்து பல உயிருங்கள வேற கொன்னு சதிப்பண்ணிடுச்சே! ஆனது ஆச்சி இன்னம் அஞ்சி நிமி~ம் பொறுத்திருக்க கூடாது. இப்படி நேரங்கெட்ட நேரத்துல சுனாமி வந்து எங்க கறிச்சோத்த காலி பண்ணிடுச்சே. இப்ப சொல்லுங்க அந்த நாள மறக்க முடியுமா? இல்ல மறக்கத்தான் வேணுமா?
செய்தியில் சுனாமியின் கோரத்தாண்டவத்தை பார்த்த அம்மா, “கடவுளோட பினாமியா கடலோட சுனாமி வந்துதான் உலகத்த வேற எதோ அழிவிலிருந்து மீட்டுருக்கு. நல்லா பாருங்க பெருமாளுக்கு உகந்த மார்கழி மாசத்துல நடந்துருக்கு. ஊர் நன்மைக்காகத்தான் இருக்கும். நாளைலேருந்து பத்து நாள் பகவானுக்கு ஏகாதசி விரதம் வைக்கனும்”; என்றாள். புதுவிரதம்! அம்மாவின் வார்த்தை பிரயோகத்தில் இருந்த ஆச்சரியத்தை விட இன்னும் கறிக்கொழம்பை சந்திக்க நெடுநாள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை பசியோடு சேர்த்து காதை அடைத்தது.
**********
-செல்லா செல்லம்
21-07-16 இரவு 8 மணி முதல் 10 மணி
இந்த சிறுகதை உங்களுக்குள் உணர்த்தும் கருத்துக்களை, கீழே உள்ள "Comment box"இல் பகிரவும். இந்த சிறுகதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவும் என்று தோன்றினால், தவறாமல் பகிரவும். நன்றி!!!

6 comments:
கண்டிப்பா அந்த நாள மறக்கமுடியாதுதான்
அம்மாவின் நேர்மறையான வார்த்தை "கடவுளின் பினாமி கடலோட சுனாமியா வந்து வேற ஒரு பெரிய ஆபத்துல இருந்து நம்மல காப்பாத்திருக்கு"அம்மா இந்த வார்த்தையை அந்த சமயத்தில் சொன்னது இதுலாம் ஒரு சுனாமியா னு ரொம்ப எளிதாக கடத்தியிருக்காங்க.வெகுளியான அம்மா எதார்த்தமா தைரியத்தை ஊட்டியிருக்காங்க எங்க அம்மா போல. "தாயின் சிறந்த கோவிலுமில்லை, தந்தை(தாயின்)சொல்மிக்க மந்திரமில்லை" இந்த வசனம் இந்த கதைக்கு பொருத்தமானதாக இருக்கும். கடவுளாக தாயும் பினாமியாக தந்தையும் உருவகப்படுத்தலாம் என்று நினைத்தேன்.அவ்வளவு நாளா காத்திருந்து விரதம் முடிச்சு சுனாமி வந்து கறி சாப்பிட முடியாம போச்சுனா எப்படி மறக்க முடியும். இன்னொரு நாள் விரதம் இல்லாத நாள பார்த்து சொல்லுங்க நானும் சாப்பிட வரேன்.
What a narative style! Superb Anna!Keep writing and engaging us to real life!
"வந்த கோபம் அதை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும் வெளிப்படுத்த முடியாமலாகி சாந்தமானது."
Wow.. touching..
Great touching story bro.. 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🙏🙂
இதை படிக்கும்போது என் தற்போதைய சூழலை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருகிறது.மிக்க நன்றி தோழர்
Post a Comment