கற்பனை!
கற்பனை பண்ண கற்றுக்கொள்ளுங்கள்!
கண்ட மேனிக்கு கற்பனை பண்ண கற்றுக்கொள்ளுங்கள்.
கற்பனை எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும்.
கற்பனை பண்ண கற்றுக்கொள்ளுங்கள்!
கற்பனை பண்ண கற்றுக் கொள்ள வேண்டுமா?
கற்பனையை கற்று கொள்ள முடியுமா?
கற்பனையை கற்றுக் கொள்ளாமல் எப்படி நமக்குள்
பிறப்பெடுக்கும?
சிந்தனை. சிந்தனையிலும் கற்பனை.
யோசனை. யோசனையிலும் கற்பனை.
கற்பனை இல்லாமல் கலை இல்லை.
கற்பனை சேராமல் கதை இல்லை.
கற்பனை கண் பாராமல் கவிதை இல்லை.
ஆக கற்பனை இல்லாமல் இலக்கியம் இல்லை.
இலக்கியம்.
இலக்கியத்தின் சிறிய ஊற்றாக கற்பனை இருக்க முடியும்.
உண்மையின் சிறிய கூற்றாக கற்பனை இருக்க முடியும்.
உண்மையின் உப நதியாகக்கூட கற்பனை இருக்க முடியும்.
கற்பனை உண்மையாகும் பட்சத்தில் உண்மை.
பொய்யாகும் பட்சத்தில் பொய்.
உண்மையில் உண்மையும் பொய்யும்
கற்பனையின் ஆடைகள்.
கற்பனைக்கு அபார சக்தி இருக்கிறது.
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள தெரிகிறது.
தக்க வைத்துக் கொள்ளவும் துடிக்கிறது.
நிரந்தரமாக இடத்தைப் பிடித்துவிடுகிறது.
நீடித்த வாழ்வு இல்லை என்றாலும் நீடித்து வாழும் இயல்பை
நிமிடங்களில் பெற்றுவிடுகிறது. உதாரணமாக
தூரத்தில் கேட்ட ஒரு குரலை ஆராய அத்தனை கற்பனைகள்?
ஏன், எதற்கு, எப்படி, யாருடையது என்பன பல கற்பனை.
ஆக கேள்விகளையும் கற்பனை, குழந்தையாக வடிக்கிறது.
கேள்விகள் ஒருவிதத்தில் கற்பனையின் குழந்தைகள்.
கேள்விகள்; ஞானத்தை தோற்றுவிக்கின்றன.
ஞானத்தை தேடியே
சற்று நேரம் கூட மனிதனை பிரிய
மறுக்கிறது கற்பனை.
ஆறாம் அறிவின் ஆற்றல் மூலம் கற்பனை.
கற்பனைகள் வலியவை. பெரியவை, அரியவை.
கற்பனையில் இருக்கிற ஸ்திரம் நிஜத்திற்கு இல்லை.
நிஜம் அபூர்வம். அத்தனை அமானுஷ்யங்களை தரவல்லது.
அத்தனைக்கும் ஆதாரம் கற்பனை.
எத்தனை கற்பனையோ அத்தனை அபிப்ராயங்கள்.
கற்பனைகள் கிளை கற்பனைகளை கொண்டது.
எப்பொழுதுமே கிளைவிட தெரிந்த மரம் அது.
விதையாய் மாறி செடியாய் நொடிப்பொழுதில்
மரமாகும் ஸ்திரம் கற்பனைக்கு உண்டு.
தூரத்தில் கேட்ட ஒரு குரலின் கற்பனைகள் ஏராளம்.
அநேகமாக கன்னிப்பருவ பெண்ணின் குரலாக அது
இருக்கலாம். வயது கண்டிப்பாக இருபதிற்கு
மேல் இருக்கலாம். உருவம் அழகை தாங்கிய
லட்சனங்களோடு இருக்கலாம் இது ஒருவித கற்பனை.
இன்னும் எழுத முடியாத கற்பனைகள் ஏராளம்.
பெண் கணிப்புகள் என்றதும் எகிறுது மனம்.
குதூகலிக்கிறது குணம்.
முன் கணிப்புகள் நடக்கும் வரை கற்பனைதான்.
டைம் டிராவல் கற்பனைதான்.
ஒரு பெண்ணின் குரல் என்னை
அத்தனை கற்பனைகளுக்கு இட்டுச் சென்றது.
நம்பினால் நம்புங்கள். படைப்பாற்றல்
எங்கிருந்து வேண்டுமானாலும் பிறக்கலாம்.
பெண்ணின் குரல் என்ன விதி விலக்கு.
விதியை வகுத்ததே கற்பனைதான்.
எதிர்காலம் குறிக்கப்படாத கற்பனைதான்.
எதிர்காலம் குறித்த கற்பனைகள் ஜோதிடம்.
ஆருடம் மொத்தமும் கற்பனையா என்றால், இல்லை.
உண்மை, உண்மை எனக்கு தெரியவில்லை.
இந்த நொடி எனக்கு அப்படி தோன்றுகிறது.
கற்பனைகள் நொடிக்கு நொடி மாறலாம்.
நொடியை விட குறைவாகவும் மாறலாம்.
அந்த அளவிற்கு என்னிடம் அளவுகோல் இல்லை.
உண்மையில் எனக்கு தெரிந்திருக்கவில்லை.
கற்பனைகள் ஆசுவாசப்படுத்துகின்றன.
சில சமயம் அலட்சியப்படுத்துகின்றன.
இவை அனைத்தும் கற்பனையை ஒரு விநாடி
உற்றுக் நோக்கப் போக எனக்கு வந்த கற்பனைகள்!
இப்பொழுது இதை படித்ததால் வந்த உங்கள்
கற்பனை!
-செல்லா செல்லம்.
14-07-2020

4 comments:
உங்கள் ஒரு நொடி கற்பனைக்கே இவ்வளவு அழகிய கவிதையாயென்று நான் கற்பனை செய்கிறேன்..!!!
முடிவு மிகவும் சிறப்பாக உள்ளது
Ne kaana ninaikum ondrai karpanayil kaanalaam,
Nijathil adu vazhi vagukavillai endraal kooda..! Nice one..
கற்பனை இல்லையேல் வாழ்க்கையின் ஓட்டம் இல்லை!!! நிதர்சனம்
Post a Comment