அடைமழை காலம் ஆரம்பம் என்றாலே பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஒரே குதூகலம்தான். திடீர் திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்படக்கூடும் என்று! அந்த நாளும் அப்படிப்பட்ட காலத்தின் இடைக்காலம்தான். ஐப்பசி மாசத்து மழை பொய்த்து மார்கழியில் பெய்துக் கொண்டிருந்தது. நேற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடும் மழை காரணமாக கடந்த இரு தினங்கள் விடுமுறையென நாகை, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தன.
மணி சரியாக எட்டு முப்பதைத் தாண்டி இருக்கும். ஆனால், அதற்கான வெளிச்சம் அறவே இல்லை. சுமாராக காலை ஆறு மணி மதிப்பிடக்கூடிய அளவிற்கான இருள்தான். பெண்கள் யாரும் வெளியில் துணிமணிகள் காயப்போடாமல் மழையை எண்ணியே காத்திருந்தது அவளுக்கு பதட்டத்தை மூட்டின. அவர்களின் எண்ணம் பலித்துவிடக்கூடாது என்றது அவளின் உள்மனம். ஆனால் மழைக்கான அறிகுறியால் மார்கழி மாதத்திற்கான பெரிய பெரிய கோலங்களும் வாசலில் சிறியதாகவே இருந்தன. வழக்கமாக வைக்கப்படும் சாணி உருண்டையும் இல்லை. அதன் மேல் அமர்ந்திருக்கும் மஞ்சள் நிற பூசணிப் பூவும் இல்லை. ஆக அதுவும் அவளுக்கு அச்சத்தை மேலும் ஊட்டின. கடந்த இரு தினங்கள் அடை மழையாயிற்றே! இன்று வேறு இந்த நிலைமை, பின் எப்படி இயல்பு நிலை இருக்கும்! எது எப்படி இருந்தாலும் அந்த பள்ளிக்கூடம் மட்டும் அன்று மிக இயல்பான வேலை நாளாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாய நிலைமை. கட்டாயம் நிர்பந்தம் என்று கூறுவதன் காரணம் அன்று சனிக்கிழமை! மழை காரணமாக விட்ட விடுமுறைகளை கழிக்க வேண்டுமே, அதுதான்.
அதனால் அந்த பள்ளிக்கூடத்திற்கு அனைத்து பால்யங்களும் தயங்கி தயங்கியபடியே சென்றுக் கொண்டிருந்தனர். அது ஓர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைத் தேடியவரின் மனைவியார் பெயரில்தான் செயல்பட்டு வந்தது. பெயர் மட்டும்தான்! ஆம், அது அன்னை கஸ்தூரிபாய் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி. நாகப்பட்டின மாவட்டத்தில் நடராஜப் பிள்ளை சாவடி கிராமத்தில் இருந்த ஒரு கிராமபுற பள்ளிக்கூடம்.
நாகை மாவட்டத்தில பிரசித்திப் பெற்ற நடராஜப் பிள்ளை சாவடியின் வெள்ளிக்கிழமை சந்தையும் அந்த பள்ளிக்குப் பக்கத்தில்தான் இருந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் புகழ்பெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தை. எல்லா பொருட்களும் கிடைக்குமிடமாகியிருந்தது. வெவ்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் ஓரிடத்தில் குழுமி தங்கள் வியாபாரங்களை செய்ய, என்ன நடந்தாலும் இங்கு வந்துவிடுவார்கள். இருப்பினும் பிரதி வாரம் தவறாது நடைப்பெறும் சந்தையே நேற்று நடைப்பெறவில்லை. காரணம் அந்தளவிற்கு அடைமழை. வெளியூரிலிருந்து வியாபாரிகள் மாட்டு வண்டியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வர வேண்டும். ஓட்டுக் கூரையினால் ஆன பள்ளிக்கூடம் அது. கடுமையாக மழைபெய்தால் ஒழுகும் அளவிற்கு ஓடுகளும் பழுதடைந்திருந்தன. ஆக சாதரணமாகவே மழை சற்று அதிகமாக பெய்தால் கட்டிடம் தாங்காமல் ஒழுக ஆரம்பித்துவிடும் என்பதால் பள்ளி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிற்கு முன்பே விடுமுறையை அறிவித்து, அதை சனிக்கிழமைகளில் ஈடுக்கட்டி விடும். இதுதான் சில வருடங்களாக அப்பள்ளியின் வழக்கமாக இருந்து வருகிறது.
அன்று கரு கரு மேகம், சிலு சிலு காற்று, அசைந்தாடும் மரங்கள், சிலிர்த்துப் போகும் உடம்பு என்று பலத்த மழைக்கான அறிகுறியான வானிலையை சூழ்நிலை அமைக்க, அப்பள்ளியை மட்டும் ஓடும் நீரில் சிக்கிய குப்பைகளைப் போல சுழன்று சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன அந்த மழை மேகங்கள். அதனால் நேற்றுப் போலவே இன்றும் கடுமையான அடைமழையையே அனைத்து மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக அந்த ஊரில் காலம் காலமாக ஒரு நம்பிக்கை இருந்து வருகின்றது. அதாவது வர்ண பகவானை வரவழைப்பதற்கும், வழியனுப்புவதற்கும் ஒரு யுக்தியை கையாண்டு வந்தனர்.
அதன்படி, ஒரு நபரை நிர்வாணமாக கையில் எரியும் கொள்ளிக் கட்டையுடன் ஊரைச் சுற்றி வரவழைத்தால் கொட்டும் மழை அறவே நின்றுவிடும் என்றும், அதேபோல் புவியில் ஒரு பூத உருவத்தை வரைந்து காலால் அதன் மீது கோடுகளை சரமாரியாக கிழித்து வைத்து எச்சிலைத் துப்பினால் வானம் கோபமுற்று தூரலைத் தூவும் என்று அந்த கிராமத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை; ஐதீகம்.
இது எந்தளவிற்கு உண்மை என்பது பற்றி, தனியாக நேரம் எடுத்து யாரும் ஆராய்ந்திருக்கமாட்டார்கள்தான். ஆனால் அங்குள்ள பெரியவர்கள் முதல் பள்ளி சிறார்கள் வரை என அனைவரின் அலாதி நம்பிக்கை காலம் காலமாக அதுதான். அவ்வாறிருக்க காலால் கோடுகளை போட்டுவிட்டு கூட்டம் கூட்டமாக சென்ற மாணாக்கர் கூட்டம் வானத்தை மேல் நோக்கி கடும் மழையை எதிர்பார்த்தே இருந்தனர். அதுவும் அவளுக்கு மூன்றாம் கட்ட அரட்டியை கூட்டின.
பள்ளியை சென்றடைந்த மாணவர்கள் அனைவரும் வகுப்பு ஆரம்பிக்க இன்னும் அரைமணி நேரம் மட்டுமே இருப்பதால் பள்ளி ஆரம்பிப்பதற்குள்ளாகவே வந்த வண்ணமே வீட்டிற்குத் திரும்பி விட வேண்டும் என்று சில மாணவர்கள் இச்செயலில் முழுமையாகவே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் பொதுநலனுக்காக போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளின் பயிற்சியில் இருந்தார்களோ என்னவோ! சில மாணவிகளும்தான். ஆனால் அவளுக்கு அப்படியில்லை அன்று பள்ளி நடந்தாக வேண்டும். வருகின்ற மழை நின்றாக வேண்டும் என்ற எண்ணம் முழுமையாக ஓடிக்கொண்டிருந்தது.
எப்பொழுதுமே ஒட்டுமொத்த எண்ணத்திற்கு ஒரு சக்தி உண்டு என்பது உண்மைதான். ஒரே செயலைப் பற்றின ஒரே சிந்தனை, அச்சிந்தனையை சீக்கிரம் செயல்வடித்திற்கு கொண்டுவரும் என்பதும் உண்மைதான். ஆனால் அதுமாதிரியான ஒட்டு மொத்த சக்தியையும் தனியே நின்று எதிர்க்கும் எண்ணம் என்னவோ மனதளவில் அந்த ஒரு மாணவிக்குள்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவள்தான் மேற்சொல்லப்பட்ட அத்தனை அவள்களுக்கும் சொந்தமானவள். ‘துர்கா’.
அவ்வாறு அவர்கள் பூமியில் போட்ட கோடுகளை அவர்களுக்குத் தெரியாமல் அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தாள். இருப்பினும், ஆண் மாணாக்கர்கள் சிலர் அச்செய்கையை கூட்டமாக செய்து கொண்டு இருப்பதால் அருகில் நெருங்கி அழிக்க இயலாது, ஒரே பதட்டத்தில் திரு திருவென்று முழித்துக் கொண்டு, தயங்கியபடியே தைரியத்தை வேண்டி நின்று கொண்டிருந்தாள். கண்டிப்பாக எந்தவொரு போட்டியானாலும் சுமார் இருநூறு பேர் படிக்கும் பள்ளியில் கூட்டமாக எதிர்த்து நிற்கும் அவர்களைத் தாண்டி, தனித்து நிற்கும் அச்சிறுமியால் வெற்றி பெறுவது என்பது நடைமுறை சாத்தியமில்லாததுதான். காரணம் அந்தளவிற்கு எதிர் கூட்டம். நல்லவேளை! அந்த கிராமத்தில் இருந்தது ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான். மேலும் பாதி பேர் தங்கள் வசதியைக் காட்டிக்கொள்ள வெளியூர் தனியார் பள்ளியில், பள்ளிப் பேருந்தில் ஏறிக் கொண்டு போய் படித்து வந்தனர். இல்லையென்றால் அவளுக்கான எதிர் சக்தியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்திருக்கக்கூடும்.
இந்த பதட்டத்தில் இருந்த அவள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். வெளுத்துப்போன நீல நிற குட்டை பாவாடை; கிழிந்து தைத்து ஒட்டுப் போட்ட வெள்ளை நிற சட்டை; திராவிடக் கருப்பு; கண்களில் ஏதோ ஓர் ஏக்கம் என பார்ப்பதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஓர் அழகான ஏழை குழந்தையின் புறத்தோற்ற லட்சனங்களோடே இருந்தாள். அவளுடைய தம்பி அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவளின் எண்ணத்திற்கு எதிரான அந்த கூட்டத்தில் அவனும் விளையாட்டாக சேர்ந்துக் கொண்டு அவளுக்கான எதிர் சக்தியை அனுப்புவதில் ஐக்கியமாகி மும்மரமாக ஈடுப்பட்டுக் கொண்டிருந்தான்.
தன் தம்பியை பார்த்த மறுகணமே கண்களை அனிச்சையாய் மூடி எண்ண ஓட்டத்தை ஆராயத் துவங்கினாள். அவ்வளவுதான். சிறிது நேரம் அவளை சுற்றி திரிந்த சக மாணாக்கரின் சப்தமும், அந்த ஆண் மாணாக்கர்களின் கட்டாந்தரை கிறுக்கல்களும் கேட்க எண்ண அலைகள் மாறி மாறி நெடுநேரம் தியானம் செய்த ஓர் துறவியின் மனநிலையினைப் போல் மெல்ல தெளிவான எண்ண காட்சிகளாக விரியத் தொடங்கின.
'மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள்.'
'அடுத்தவேளை சமயலுக்காக பொறுக்கி சேமிக்க இடமில்லாமல் வாசலிலேயே போட்டு வைத்திருந்த விறகு சிப்பிகள். '
'மழை காரணமாகவே பூசணம் பூத்திருந்த எலுமிச்சை ஊறுகாய்.'
'அடுத்த நாள் போட்டு வரவேண்டிய மற்றொரு ஜோடி பள்ளி சீருடைகள். பள்ளியில் கொடுத்த சீருடைகள் எளிதில் காயக்கூடியதாக இருந்திருக்கவில்லை என்பது பொதுவாகவே அரசாங்க சீருடையை பயன்படுத்தும் பள்ளிக் குழந்தைகளின் அசௌகரியம்.'
'மழையில் நனைய மறுத்து, நனைந்தது பாதியும் நனையாததப் பாதியும் எறவானத்தில் ஒண்டியிருக்கும் அவளது வீட்டுக் கோழிகள்.'
'நனைந்து நிற்கும் பூச்செடிகள். குறிப்பாக தம்பி நட்டு வைத்து வளர்க்கும் பட்டுரோஜா.'
'சொருகு கீற்று விடுவதற்கெனவே எறவானத்தில் கட்டித்தொங்கும், அப்பா கைப்பட முடைந்த புதியக் கீற்றுகள்.'
'நாத்து நடவுக் கூலி வேலைக்கு சென்றிருந்த அம்மாவின் கவலையான முகம்.'
'மழையால் உள்ளுரில் வேலையில்லாததால் வேலையைத் தேடி வெளி ஊர் சென்றிருக்கும் அப்பா நிலைமை? '
'மதிய சாப்பாட்டுக்காகவே இருவரையும் தினமும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் அப்பனை பெற்ற ஆயாவின் முகம்!'
'சூரியனுக்கு வழிவிட்டு, கீற்றுகள் உதிர்ந்துப் போய் நின்றதனால் தெரியும் மோட்டுவளைக் கழிகள்.'
'ஒழுகும் அடுப்பங்கரை.'
'கரைந்தோடும் முட்டுச் சேர்ந்திருந்த வாசல் மண்.'
'கொட்டும் மழையில் பரண் கீற்றை சரி செய்யும் தந்தையின் ஈரமுகம்.'
'ஒழுகும் அத்தனை இடங்களிலும் வைக்க கூட இயலாத அளவிற்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள பாத்திரங்கள். குறிப்பாக அதில் பங்கெடுக்கும் அவளுடையத் தண்ணீர்க் குவளை மற்றும் பள்ளிக்கூட சாப்பாட்டுத் தட்டு.'
'தரையில் ஓதம் ஏறி நீர்கோர்த்து நிற்கும் வீட்டுத் தரை.'
'சணல் சாக்குப் படுக்கை.'
'படுப்பதற்கு இடமின்றி தன் தாயின் மடியிலேயே தம்பி உறங்குவது.'
'நிர்வாணமாக வீட்டை சுற்றிக் கொள்ளிக்கட்டையுடன் ஓடி மழையை நிறுத்த தம்பியை அம்மா அனுப்பி எடுக்கும் கடைசி முயற்சி.'
'முண்டக்கட்டயாய் மழையில் நனைந்தவனுக்கு, முந்தானையால் தம் தாய் தலை துவட்டும் காட்சி.'
'ஈரத்தரையில் நடந்ததால் தம்பிக்கு வரும் நடுக்கலுடன் கூடிய ஜீரம்.'
என அவளது எண்ணக் காட்சிகள் மின்னல் வேகத்தில் வந்து செல்லும் நேரத்தில் பலத்த இடி காதோரமாய் “டமார்” என்று ஒலித்தது. தொடர்ந்து இடியின் சத்தம் வேறு மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வர, அதிர்ந்து போனாள்.
“போச்சு! எல்லாம் போச்சு! மூடிய கண்களில் திடீர் வெளிச்சம். கண்டிப்பாக மின்னல்தான்.” கண்களை மெல்ல திறக்கலானாள். கண்களில் கசிந்திருந்த நீரால் பிரகாசமான வெளிச்சம்கூட மங்கலாத் தெரிந்தது. கண்களை துடைத்தவாறே, சற்று சுதாரித்து, நிதானித்தாள்;புலப்பட்டது!
இடியாய் ஒலித்தது பள்ளியின் மணி ஓசை என்பதும் அடுத்தடுத்து குறைந்துக் கொண்டே வந்த இடியோசை அந்த மாணாக்கர்கள் வாத்தியாரிடம் முதுகில் வாங்கிய அடி என்பதும் புரிய வந்தது. மின்னல் ஒளி? சூரிய ஒளிக்கீற்று.
அப்பாடா! நல்லவேளை! அவன் தம்பி தப்பிவிட்டான் போலும். அவனை அங்கு காணவில்லை. மனதிற்குள் சற்று நிம்மதியும் பிறந்தது.
கண்களை முழுவதுமாய் திறக்க, கண்ணை கூசும் அளவுக்கு மேலே சூரியன் எழும்பி கொண்டிருந்தான். ஊர்ஜிதமானது. மழை இனி வராது. கதிரவன் கைக்கொடுத்துவிட்டான். ஆறுதல்! ஆர்ப்பரிப்பு! வாய் வழி வந்த மகிழ்ச்சியின் புன்னகையை அடக்க, கண்களில் பீறிட்டது. அவ்வளவுதான். மழை வந்தது! ஆனந்தக் கண்ணீராக “கண்ணீர் மழை.”
அனிச்சையாக கணப்பொழுதில் கைகளை கூப்பி இயற்கைக்கு நன்றி சொன்னாள்.
அனைவரையும் விரட்டி அடித்துவிட்டு வந்த அந்த வாத்தியார், “ஹேய்! கழுதை. உள்ள போ!” என்று வார்த்தைகளை கடுக்க, நிதானித்து கண்களைத் துடைத்துக் கொண்டே ஓடினாள்.
அன்று மழை வராமல் போனதில் வாத்தியார் உட்பட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விடுமுறையை தொலைத்த அந்த நிமிட வருத்தம் மட்டும்தான்! அவளுக்கு பேரிடர் தவிர்த்த நிம்மதி!
-செல்லா செல்லம்
20-08-2015 4.55pm to 5.10pm

19 comments:
இது எனக்கு ஒரு பெரிய நினைவூட்டலாக இருந்தது. மழைக்காக நாங்கள் எதிர்பார்க்கும் அந்த நாட்களில், நாங்கள் விடுமுறை நாட்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம், ஆனால் சரியான வீடுகள் இல்லாதவர்களைப் பற்றி நமக்குத் தெரியாத ஒன்று இருக்கிறது. நன்றி .
Wonderful story Anna😍😍chinna chinna vishayangalayum avlo alaga sollirukinga indha story la.Hearty congratulations Anna.Keep surprising and inspiring us with ur fantabulous Writing.Waiting to read more....😻🔥🔥
அருமை பதிவு . மகிழ்ச்சி
almost reflecting my childhood. strong words makes me relive it. wonderful writing.
Very nice story
அருமையான பதிவு👌👌👌👌.மிகவும் சவரசியமாக இருந்தது👍.நான் சிறு வயதாக இருந்தபோது துர்காவின் எண்ண ஓட்டங்கள் என்னுள்ளும் தோன்றிருக்கிறது.மழையால் ஒரு ஏழை குடும்பம் படும் அவலங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.தாங்கள் சொன்ன மாதிரி ஒருபெண்ணின் வலிமையான எண்ண சக்தி என்றும் வெற்றியை தரும். நன்றி......👍
கண்ணீர் மழை - அவள் கண்கள் சுமந்த கண்ணீர் அழகு 😍
மழைக்காலத்தில் நடக்கும் சின்ன சின்ன விசயங்களை அழகாக கவிதை நடை போல் எழுதியது அருமை. பெண்களின் கண்ணீருக்கு பின்னாடி உள்ள விசயங்களை கூறியது, அதை சிறுமியின் கண்ணீருடன் ஒப்பிட்டது சிறப்பு. கதையில் கிராம சாயல் வீசியது அழகாக இருந்தது.
மழைக்காலத்தில் நடக்கும் சின்ன சின்ன விசயங்களை அழகாக கவிதை நடை போல் எழுதியது அருமை. பெண்களின் கண்ணீருக்கு பின்னாடி உள்ள விசயங்களை கூறியது, அதை சிறுமியின் கண்ணீருடன் ஒப்பிட்டது சிறப்பு. கதையில் கிராம சாயல் வீசியது அழகாக இருந்தது.
Epps mihavum thevaiyana ondru. Nslla karpanai. But true
Epps mihavum thevaiyana ondru. Nslla karpanai. But true
அருமையான பதிவு...
மழைக்காலத்தில் விடுமுறை வேண்டி தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து நமது மாவட்டம் பெயரும் விடுமுறை மாவட்டத்தில் வராதா என்று எதிர்பார்த்த நினைவுகள் நினைவுக்கு வருகிறது ஆனால் அன்று என் சுய விருப்பத்திற்காக வேண்டினேன் சிறிதளவு கூட வீடுகள் சரியில்லாதவர்கள் பற்றி சிந்தித்தில்லை இக்கதை தெளிவாக கற்பனை செய்து ஒரு காணொளி கண்டது போலவே இருக்கிறது உங்கள் கதை
பலரின் வாழ்க்கையில் உண்மை கதையும் கூட..........
அருமை அண்ணா
Kaaviyangalil mattume pengaluku sakthi irupathaga solli .. .kelvi mattum than pattu irukum indrum pengaludaiya ennathirku sakthi undu enbathai azhaha solli irukaru writer
My 15 years back kutty school life memories llam thatti elupitinga❤️😍
#Sellaism
Nagariga vazkaiyai mattume vazhum panakara kuzhathaikal kandipa padika vendiya kathai.. Intha ezhai sirumi thannudaiya elamail varumaiyal.. Than elamaiku undana sugangalaye ezhakiral enpathai writer azhaga solli irukaru sirumiyin kangal mattum alla paditha en kangalum kalagaidichu👏👏👏👏
சிறப்பு 😍
Aaaasaaammm💝😍👍
இந்த கதை எனது பள்ளி பருவத்தை நினைவூட்டியது அருமையான படைப்பு பயணம் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்.ஜிம சுரேஷ் திண்டுக்கல்
Post a Comment