Saturday, December 12, 2020

பாட்ஷா - Short Story

                         “பாட்ஷா


கி.பி. 1995. பட்டாளத்துக் காலனி, சென்னை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைக்கொட்டகைகளில் வெளிவந்து வசூல் சாதனை செய்து கொண்டிருந்த தருணம்.

ஆலந்தூரில் இருக்கும் பட்டாளத்துக் காலனி, காஷ்மீரத்தில் பட்டாளத்து வேலைப் பார்க்கும் வீரர்களுக்கென அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு காலனிக் குடியிருப்பு பகுதி. சுமாராக நூற்றைம்பது வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதியாக இருந்தாலும் நூற்றைம்பதும் பட்டாளத்துக்காரர்களின் குடும்பம்தான். அவர்களுக்கென்று தனி பள்ளி, தனி விளையாட்டுத் திடல், தனி வணிக நிலையம், தனி உடற்பயிற்சி கூடம் என்று சலுகைகளில் அரசாங்கத்தால் எல்லாமே ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் அந்த காலனியை விட்டு அவர்கள் வெளியே வருவதற்கு வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். பனிப்பிரதேசத்தில் அவர்களின் வீட்டு ஆண்கள் படும் சிரமத்திற்கான சிறிய சன்மானம் என்று அவற்றை கருத்தில் கொள்ளலாம். இருந்தாலும் போர் சமயங்களில் பட்டாளத்துக்காரர்களைப் பற்றின செய்திகளை தினசரியில் படிக்கும் பொழுதெல்லாம் அவர்களின் சேவைக்கு எதை கொடுத்தாலும் ஈடாகத ஒன்று மாதிரிதான் தோன்றும்; வீட்டு ஆண் பிள்ளைகள், பாதுகாப்பாக வீட்டை விட்டு சென்றாலே “பார்த்து போ! பார்த்து போ!” என்று கூறும் நாட்டில், நாட்டின் பாதுகாப்பு வேலைக்காகவே வெளியில் செல்ல அனுமதித்து இருக்கும் அவரது வீட்டாரின் மனநிலைக்கு இன்னும் என்ன வேண்டுமானலும் அரசாங்கம் செய்யலாம்தான்!


எது எப்படியாகினும் திரைப்படம் பார்ப்பதற்கு மட்டும் காலனியிலிருந்து அவர்கள் வெளியே வந்துதான் ஆக வேண்டும். காரணம் அவ்வளவாக தொலைக்காட்சி வசதிகள் புழக்கத்தில் இல்லாத அந்த காலத்தில் கணிசமாக இருந்தது ஊருக்கு ஒரு தொலைக்காட்சிதான். அதுவும் பொதிகை தொலைக்காட்சி மட்டுமே பிராதனம். அவற்றில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் புதிய திரைப்படங்களுக்கு அறவே வாய்ப்பில்லை. புதிய திரைப்படத்தை பார்க்க வேண்டுமெனில் திரையரங்கிற்கு சென்றே ஆக வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமையில் பொதிகையில் ஒளிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சயில் பாட்ஷா படத்தின் புது பாடலை “நான் ஆட்டோக்காரன்… ஆட்டோக்காரன்” என்று போட்டு போட்டு காண்பித்ததும் அந்த காலனி மக்களுக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பித்து பிடித்தது போல் ஆகிவிட்டது.


படம் வெளியாகி பத்து தினங்கள் ஆகியும் திரையரங்கில் டிக்கெட் கிடைக்கவில்லை. தப்பி தவறி காலனியில் இருக்கும் ஒரு இளைஞன் வேறு, படத்தை  முதல் நாளே பார்த்துவிட்டு, கதையைத் தவிர, அதிலுள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் மற்றவர்கள் காது எரிய எரிய சொல்லி வெறுப்பேத்திக் கொண்டிருந்தான்.


எனவே எப்படியாவது, இன்றே அந்த படத்தை பார்த்துவிட வேண்டும் என்று இந்திரா அவளது மகள்களுடன் காலையிலேயே திரையரங்கிற்கு வந்து சேர்ந்துவிட்டாள். இந்திரா அந்த குடியிருப்பில் கிழக்கு பார்த்த தரைத்தள எட்டாம் நம்பர் வீட்டில் வசிப்பவள். காதலித்து தன் மாமனை திருமணம் செய்து கொண்டவள். தற்போது வயதிற்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய் என்ற போதும் கணவனை நேரில் சந்திப்பது என்னவோ வருடத்திற்கு ஒருமுறைதான். அதேமாதிரி அதே குடியிருப்பில் எண் ஒன்பதில் குடியிருக்கும் பிரேமா அவளது இருமகன்களுடன் அதே திரையரங்கிற்கு ஏற்கனவே வந்திருந்தாள். இருவருமே டிக்கெட்டுக்காக அலைமோதி வர யாருக்குமே டிக்கெட் கிடைத்தபாடில்லை. ஒருவழியாக இந்திரா தன் மகள்களுடன் எப்படியும் டிக்கெட் கிடைக்காதென்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீணாக இன்றைய காட்சிக்கு காத்திருக்காமல் நாளைய மறுநாள் காலை காட்சிக்கு முன்பதிவு செய்துவிட்டு மிகுந்த வருத்தத்தோடே வீடு நோக்கி புறப்பட்டாள்.


ஆனால் பிரேமாவின் மகன் எப்படியோ நாளைய முதல் காட்சிக்கு பிளாக்கில் முன்பதிவு செய்த டிக்கெட்டை இரட்டிப்பு பணம் கொடுத்து வாங்கிவிட்டான். பிரேமா, இந்திரா இருவருமே சமவயதை ஒத்தவர்கள்தான். இருவருமே அந்த பட்டாளத்துக் காலனியில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள். இந்திரா தனக்கு பெண் பிள்ளைகள் இருப்பதனால் பிரேமாவிடம் சரியாக எப்பொழுதுமே பேச்சு வார்த்தை வைத்து கொள்ள மாட்டாள். காரணம் பிரேமாவின் ஆண் பிள்ளைகளை நினைத்து அவளுக்கு பயம். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த பிரேமாவின் பையன்கள் தன் மகள்களை காதலித்து விடுவார்களோ என்றுதான். எனவே தன் மகள்களை பொத்தி பொத்திதான் வளர்த்து வந்தாள். அதுமட்டுமல்லாமல் சிறுவயதிலிருந்தே அக்கம் பக்கத்திலிருப்பவர்களின் மீதான வெறுப்பையும் தற்சாதி பெருமையையும் சேர்த்தே வளர்த்து வைத்திருந்தாள்.


இந்திரவும் பிரேமாவும் அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்கள்தான் என்றாலும் நேரடி வாய்சண்டை என்றோ, போட்டி என்றோ வெளிப்படையாக சொல்லமுடியாத அளவிற்கான பனிப்போர்தான். ஆனால் இதுமாதிரியான படம் பார்க்கும் விஷயங்களிலெல்லாம் இருவருக்குமே நேரடிப் போட்டியே வந்துவிடும். ஆனால் பட்டாளத்தில் வேலை பார்துவிட்டு விடுமுறையில் அவரது கணவர்களில் யார் ஒருவர் வந்தாலும் மற்றவர் வாங்கித்தரும் பொருட்களையும் எடுத்து வந்து கொடுப்பதுதான் வழக்கம். இருந்தாலும் ஏதோ ஒரு மனப்பான்மை இரு வீடுகளுக்குள்ளும் பனிப்போரை நடத்திக் கொண்டிருந்தது. 


அந்த காலத்தில் தொலைபேசியெல்லாம் சரியாக வழக்கத்தில் கிடையாத காலம். எதுவாகினும் கடிதப் போக்குவரத்துதான். அவசரத்திற்கு தந்தி கொடுப்பதுதான் வழக்கம். அதுவே மிக வேகமான செய்தி அனுப்பும் சாதனமாக இருந்து வந்தது எனும் போது அவர்கள் இங்கு நேரடியாக வருவதும் அத்திப் பூக்கும் கதைதான். கடைசியாக வந்த கடிதத்தில் கூட இருவரும் ஒரே முகாமில் செயல்பட்டு வருவதாகத்தான் எழுதி இருந்தனர்.


மறுநாள் காலை 10 மணி. காலை 11 மணி காட்சிக்காக, ஆட்டோ அமர்த்திக் கொண்டு வந்துவிட்டான் பிரேமாவின் மகன். அனைவரும் ஆட்டோவில் ஏறி காலனியே பார்க்கும்படி பாட்ஷா திரைப்படத்திற்கு சென்றதும் இந்திராவின் மகள்களுக்கு அழுகலும் ஆத்திரமும் அடைத்துக் கொண்டு வந்தது. அவர்கள் சென்ற ஆட்டோவின் பின்புறத்தில்  ரஜினியின் பாட்ஷா படத்தின் போட்டோவோடு ‘பிரசவத்திற்கு இலவசம்’, ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்றிருக்க அவர்களின் ஆசையை மேலும் தூண்டின. அதை புரிந்துக் கொண்ட இந்திரா “அதான் நாளைக்கு மார்னிங் ஷோ, நாம புக் பண்ணியிருக்கோம்ல. நாளைக்கு போவோம். உள்ள போங்கடி” என்றாள்.


     மணி 11.30 நெருங்கி கொண்டிருந்தது. வீட்டில் அவர்களால் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. மனம் முழுவதும் பாட்ஷா படத்தின் மீதே இருந்தது. பட்டாளத்துக் காலனியே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க, வழக்கமாக வரும் தபால்காரரும் வந்தார். பொதுவாக அவர் வந்தால் ஒன்று மாத சம்பளம் மணி ஆர்டரில் வந்திருக்கும்.  இல்லை என்றால் கடிதம். இதுவோ மாத நடுப்பகுதி அதனால் அவைகளுக்கு வாய்பப்பில்லை. இருந்தாலும் வந்தார். காரணம் ரகுபதி என்ற பெயரில் பிரேமா வீட்டு முகவரிக்கு வந்திருந்த தந்திதான் அது.

     அவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால், ஏதோ அவசர செய்தியாக இருக்கலாம் என்று தபால்காரரே பிரித்து படிக்க, இந்திரா முகமலர்ச்சியிழந்த தபால்காரரை பார்க்க, மெல்ல தொண்டையில் துக்கத்தை நொடிப்பொழுதில் தாங்கியவனாய், “பட்டாளத்துல நேத்து நடந்த போர்ல ரகுபதி இறந்துட்டாராங்க! அதான் பாடி வந்துக்கிட்டு இருக்காம். நாளை காலையில பாடி வந்துடுமாம்.” என்றதும் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. தன் கணவனே இறந்ததுப் போல ஓர் உணர்வு. என்ன செய்வதென்றே புரியவில்லை. உலக உருண்டை இயக்கத்தில் இருப்பதை உணரும்படியாக எல்லா பொருட்களும் அசைவதாய் தெரிந்தன. மதிய நேரம் என்பதால் ஆண்பிள்ளைகள் யாரும் குடியிருப்பு பகுதியில் இல்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து தியேட்டருக்கு சென்றுவிட்டாள். படத்தின் தலைப்பு போட்டு படம் ஆரம்பிக்கும் தருவாயில், அவர்கள் இருந்த இடத்தை போய் கண்டுப்பிடித்து தந்தியைக் காட்டி விஷயத்தை சொன்னதும் பிரேமா கதறிய கதறலில் தியேட்டரே ஸ்தம்பித்திற்க வேண்டும். ஆனால் ரஜினியின் அறிமுக காட்சிக்காக ரசிகர்கள் போட்ட சத்தம் அதை பெரிதாக வெளியே விடவில்லை. பத்தாதற்கு சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்த் வேறு “நான் ஆட்டோக்காரன் ஆட்டோகாரன்” என்று எஸ். பி. பாலசுப்பிமணியம் குரலில பாட, “நான் பிரசவத்திற்கு இலவசமா வாரேம்மா”, என்ற வரி அவர்கள் தியேட்டரை விட்டு வெளியேறும் போதும் கேட்டுக் கொண்டிருந்தது. அழுதுக் கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்கள். இந்திராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த ஆட்டோ பயணம் இறுதி ஊர்வலத்திற்கு சமமான வலியை இருவருக்கும் கொடுத்திருந்ததென்றால் மிகையாகாது. காலனியும் நெருங்கியது. முன்கூட்டியே செய்தியறிந்து கூட்டம் குழுமியிருந்தது. அவசர அவசரமாக உறவினர்களும் வரவழைக்கப்பட்டனர். அழுதபடியே அந்த ஒருநாள் பொழுதும் கழிந்தது. கிராமங்களைப் போல் அணைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டு அழுவதற்கெல்லம் அங்கு யாரும் இல்லை. எல்லாருமே அமைதியாய் இருக்க பிரேமா மட்டு தேம்பி தேம்பி தனியே ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுக் கொண்டே இருந்தாள். அக்கம் பக்கம் குடியிருக்கும் அவரவர்களும் இயல்பாகவே மறைமுகமாக தங்களின் வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.


     பொதுவாக கிராமங்களில் இன்றும் ஒருவர் இறந்துவிட்டால் அடுத்த தெருவிலிருந்தும் கூட அனைவரும் சென்று துக்கம் விசாரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அவர்களுக்காக தங்களின் ஒருநாள் இயல்பு வாழ்க்கையை நிறுத்தி மற்றவர்களும் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வது இயல்பு. காரணம் இறந்தவர் சென்றாலும் இத்தனை பேர் நம் சுக துக்கங்களில் பங்கெடுக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நம்பிக்கையை அது விதைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். மேலும் இறந்தவரை பற்றின தொடர் விசாரிப்புகளில் அவரை பற்றின ஏக்கம் குறைந்து விடுவதாகவும் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் சென்னை போன்ற சில பெருநகரங்களில் ஒரு பிணம் கிடக்க, அனைவரும் தாண்டி தாண்டிப் போய் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. சாதி மத பேதம் பல இருந்தாலும், ஓரிடத்தில் குழுமி வசிக்க துவங்கிவிட்ட பின் அனைவரையும் ஒன்றாக பார்க்கும் மனோபாவம், அதே நகரத்தில் ஆரோயக்யமானதாகப்படுகிறது. மேலும் திரைப்பட நடிகரின் மீது இருக்கும் பற்றுதலும் மோகமும் பக்கத்து வீட்டிலிருப்பவரிடம் , பாதியைக்கூட காண்பிக்க மறுக்கிறோம் என்பது சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற நிதர்சனமற்ற ஏற்றத்தாழ்வு எண்ணங்களின் வீரியத்தைத்தான் காட்டுகின்றன.

    மறுநாள் காலை 10 மணி. இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. உடல் வருவதற்கு மாலை பொழுது ஆகிவிடும் என்று ஆளாளுக்கு கண்ட மேனிக்கு கணித்துக் கொண்டிருந்தனர். இதுதான் சாக்கென்று, இந்திராவின் மகள்களோ அவளை நச்சரித்துப் படத்திற்குப் போக அடம்பிக்க, வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல், இந்திரா தன் மகள்களை நடத்தி அழைத்துக் கொண்டு வெளியில் போய், ஆட்டோ அமர்த்திக் கொண்டு படம் பார்க்க போய்விட்டாள். பக்கத்து வீடு துக்கத்தில் இருக்க படம் பார்க்கப் போகும் மகிழ்ச்சி, உணர்ச்சி பிழம்பாய் பொங்கி வழிந்தது இந்திராவின் மகள்களுக்கு. ஆனால் இந்திராவுக்கு மட்டும் எதோ ஒரு நெருடல் இருந்து கொண்டுதான் இருந்தது.

     மணி சரியாக 11.30 நெருங்கி கொண்டிருக்க, படமும் ஆரம்பிக்கப்பட்டது நேற்று இந்திரா வந்து செய்தி சொல்லும் போது எந்த காட்சி ஓடிக்கொண்டிருந்ததோ அதே காட்சி. பிரேமாவின் மகன் எங்கெங்கோ அலைந்து விட்டு, மருத்துவமனைக்கெல்லாம் சென்றுவிட்டு சந்தேகத்துடன், ஒருவழியாக தியேட்டருக்கு வந்தான். கிட்டத்தட்ட 10 நிமிட போராட்டத்திற்குப் பின் இந்திரா அமர்ந்திருந்த இருக்கையை கண்டுப்பிடித்ததுமே வேர்க்க வியர்க்க, இரைச்சலுடன், சொல்வதற்கு சக்தியில்லாமல் சொன்னான். “தந்தி மாறி எங்க அட்ரஸ்க்கு வந்திடுச்சாங்! இறந்தது உங்க வீட்டுக்காரங்களாங்! பாடி கூட வீட்டுக்கு வந்திடுச்சி! கன்பார்ம்.” என்று சேர்த்து ஓரே மூச்சில் சொல்ல நினைத்ததை, ஏற்றி இறக்கி சொல்லி முடித்தான்!

     ஆமாம். மன்னிச்சுடுங்க! நானும் கதை சொல்ற சுவாரஸ்யத்துல சொல்ல மறந்துட்டேன். இந்திராவோட புருசன் பேரும் ரகுபதிதான். பெயர் அகர வரிசையால்தான் இருவருக்குமே எட்டு மற்றும் ஒன்பது என அடுத்தடுத்த எண் வீடாக காலனியில்கூட ஒதுக்கீடு பண்ணப்பட்டிருந்தது.

இந்திராவின் வருகைக்காக காலனியே காத்திருந்தது!


     -செல்லா செல்லம்

                                04-08-16 இரவு 9.30 - 11.00






இந்த சிறுகதை உங்களுக்குள் உணர்த்தும் கருத்துக்களை, கீழே உள்ள "Comment box"இல் பகிரவும்.  இந்த சிறுகதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவும் என்று தோன்றினால்,  தவறாமல் பகிரவும். நன்றி!!! 



சமூக நீதி அரசு யாருக்கானது?

 சுதந்திர தினம் வந்துவிட்டது கொண்டாடியே ஆக வேண்டும் " ஆக" உழைப்பின் உரிமைக்காக போராடும் தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குப்பை போல் ...