எழுத்து
எழுத ஆரம்பித்த முதல் நாள் கூட
நன்றாக நினைவில் இருக்கிறது.
போட்ட முதல் ‘அ’வும் நெஞ்சில் 
பதிந்த எழுத்தாணிதான்.
அந்த ‘அ’வன்னா வின் நீட்சிகள்தான் 
இன்றைய எழுத்துக்கள் எல்லாமே!
இலக்கின்றி எழுதிய தருணங்கள் 
நெஞ்சில் இனிமையை சேர்த்திருக்கின்றன.
இலக்கு எழுதுவது மட்டும்தான் 
என்றிருந்த போது கிடைக்கின்ற சுகமே வேறு!
ஆனால் அங்கீகாரம், பரிசுப் பொருட்கள் 
எனும் போது அந்த இலக்கு கிடைக்கும் 
சுகத்தை விலக்கு வைக்கிறது.
வெறும் அங்கீகாரத்தை மட்டுமே 
இலக்காக கொண்டு பிறப்பெடுக்கும் எழுத்துக்கும்,
பிரசவிக்கும் எழுத்தாளனுக்கும் கிடைக்கின்ற 
உறவின் இனிமையின் இடைவெளி இன்னும்
அதிகமாகலாம்.
எழுத்து என்பதில் வெற்றி, தோல்வி, சிறந்த
என்பதெல்லாம் கிடையாது.
எழுதப்பட்ட எல்லா எழுத்துக்களுமே
வெற்றிப் பெற்றவைதான்.
சிறந்தவைதான்.
மோட்சம் கொண்டவைதான்.
ஒரு எழுத்து மற்றொரு எழுத்திடம் 
போட்டி போடவும் முடியாது.
போட்டி போடவும் கூடாது.
அவ்வாறு போட்டியிட சொல்பவர்கள், 
அறைவேக்காடு. முட்டாள்கள். 
எழுத்தைப் பற்றின விவரம் 
தெரியாதவர்கள்.
படைப்பாற்றலில் வணிகத்தன்மையை
ஊக்குவிக்கும் அறிவிலிகள்.
எழுத்துக்கள் பிறப்பெடுக்கும் போதே
உணர்ச்சிகளின் ததும்பில் முண்டியடித்துக் 
கொண்டு போட்டிப் போட்டு வெற்றிப் பெற்றுதான்
வார்த்தையாகின்றன.
மூளைக்கும் பேனா முனைக்கும் உள்ள
தூரத்தில் நிகழும் ஒரு ஓட்டப் பந்தயம் அது.
மை வழி வந்து விழும் எழுத்துக்கள் யாவுமே
வெற்றிப் பெற்றவைதான்! சிறந்தவைதான்!
தன்னளவில் வெற்றிப் பெற்றுதான் எழுத்துக்கள்
பிறப்பெடுக்கின்றன.
இலக்கணம் தவிர்த்து எந்தவொரு அளவுகோலும்
எழுத்துக்கு கிடையாது என்பதே எழுத்தின்
சிறப்பம்சம்.
அவ்வாறிருக்க அளவுகோலிட்டு எழுத்தை 
கட்டுக்குள் அடக்க நினைப்பது மடத்தனம்.
அதில் போட்டி வைத்து போர் செய்வதென்பது
அறியாமையின் வெளிப்பாடு.
கொடுக்கப்போகிற அல்லது பெறப் போகிற
பரிசுக்காக எழுத்துக்கள் விலை போக
அனுமதிக்க கூடாது.
எழுத்துக்கள் விலைமதிப்பற்றவை
என்பது கர்வம் இல்லை. உண்மை.
வெண்பாக்கள் வந்த சமயத்தில்தான்
வள்ளுவன் குறட்பாவில் எழுதினான்.
வித்தியாசங்கள் சமகாலத்தில் 
மறுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் துதிக்கப்படும்.
மற்றப்படியான பரிசுகளை யாருக்கேனும்
கொடுங்கள். 
அவர்கள் ஏக்கத்திற்கு தூக்கம் கொடுங்கள்.
என் ஏக்கத்திற்கு ஊக்கம் கொடுங்கள். ஆக்கம்
தருகிறேன். பல பக்கம் எழுதி தருகிறேன்.
பேனா மை தீரும் வரை எழுத வந்தவனல்ல.
எழுதி எழுதி பேனா மைக்களை தீர்க்க வேண்டும்
என்பதற்காக வந்தவன். கொண்டுவாருங்கள் 
எனக்கான பேனாக்களை! அதுபோதும்!
அதுவும் இல்லை என்றால் எண்ணத்தில் எழுதுவேன்!
எவருக்காவது எடுத்துரைப்பேன்!
என் வழி தனி வழி. என் பணி எழுத்துப் பணி.
எழுதுவதில் இருக்கிற சுகம், பிரசவித்த
பெண்ணின் சுகம்.
பிறர்க்களித்த மண்ணின் சுகம்.
அனுபவியுங்கள்!
போட்டி படைப்புக்கானதாய் இருந்தால் பலம்.
பரிசுக்கானது மட்டும் எனும் போது பலவீனம்.
வெற்றிக்குப் பின் வெற்றிடம் என்பதுதான் பொருள்,
ஆனால் தோல்விக்குப் பின் நிச்சயம் வெற்றியிருக்கிறது.
சிந்தியுங்கள். எதுவாகினும் எப்பொழுதும் எழுதிக் கொண்டே
இருங்கள். என்றாவது யாருக்காவது பயன்படும், எழுத்து! 
-செல்லா செல்லம்.
                                        02/08/2018 - 12.30 PM
இந்த கவிதை உங்களுக்குள் உணர்த்தும் கருத்துக்களை, நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை கீழே உள்ள "Comment box"இல் பகிரவும்.  
இந்த கவிதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவும் என்று தோன்றினால்,  தவறாமல் பகிரவும். 
நன்றி!!! 

4 comments:
ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் கொண்டாடப்பட வேண்டிய கர்வம், கவிதை வாயிலாக கண் முன் நிற்கின்றது. "எழுத்து" -> என்னுள் தூங்கிக்கிடக்கும் படைப்பாளியை எழுப்ப வந்துள்ளது 💥💥
ஏடுகளில் எழுதிய எழுத்தை படிக்க இந்த காலத்தில் மனிதர்கள் மிகவும் குறைவு...... இந்த நிலை மாற வேண்டும். வாசகர்கள் அதிகமாக உருவக வேண்டும். தாங்கள் சொன்ன மாதிரி எழுதிய எழுத்து என்றும் வெற்றி பெற்றவை.. எழுத்தின் மீது உள்ள தங்களின் காதல் மேன் மேலும் உயர் வேண்டும்.... எழுத்தின் மூலம் தாங்கள் மிக பெரிய வெற்றியாளராக வருவீர்கள். நன்றி.....
Penning perumai unarthum story. A different dimension
Motivational kudukra eluthaka irukira ongal eluthu ,athum eluthai vaithu eluthuku alagu serththathu sirappu
Post a Comment