“கடையமாட்டுப் பாலு”
கடையமாட்டுப் பாலு.
புஞ்சையைச் சுற்றி சுமாராக 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்தப் பெயர் மிக பிரபலம். அனைத்து ஊர்களிலுமே சொந்த ஊர் புஞ்சை மாதிரியே பழக்கம். சொந்த ஊர் எது என்று தெரியாத அளவிற்கு அனைத்து ஊர்களிலும் தங்கி இருப்பது, அந்த ஊர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் முதல் மாடு வைத்திருப்போர்கள்வரை என அனைவருக்கும் அன்யோன்யம் என்று அவருடைய பழக்க வழக்கம் விசாலமாகியிருந்தது. புஞ்சையில் வடுவத்தெரு ஒட்டியுள்ள கன்னிக்கோயில் தெருவை சேர்ந்த பாலு நான்கரை அடி உயரம்; முறுக்கு மீசை; தேங்காப்பூ துண்டாலான தலப்பாகட்டு; கையில் நீண்ட மூங்கில் தடி; சுற்றிலும் முடி வைத்து உச்சி மண்டையில் உதிர்ந்து போய் நிற்கும் முடி; முறுக்கேறி நரம்புத் தெரியும் கை கால்கள்; குழி விழுந்த கன்னங்கள் என்று தனக்கெனன பிரத்யேகமான அடையாளப் பணியில்தான் இருப்பார். சின்ன குழந்தையைக் கேட்டால்கூட அவரின் தோற்ற அடையாளத்தை கூறிவிடும். அந்தளவிற்கு எப்பொழுதும் அவர் அதே தோற்றத்தில்தான் இருப்பார். தோற்றத்தின் கம்பீரத்திற்கு ஏற்றவாறு குரலும், பேச்சு மொழிக்கென்று தனிக்குரலும், மாடுகளை அதட்டுவதற்கும் அவற்றுடன் உரையாடுவதற்கும் தனிக்குரலும் தனித்தனியாக வைத்திருப்பார் எனலாம்.
எப்பொழுதும் ஒரு காளை மாட்டுடனேயே ஊர் ஊராக சுற்றி வரும் அவரது பிரதானத் தொழில் பசு மாடுகளுக்கு காளை கட்டுவதுதான். அதாவது மாடுகளை சினை சேர்ப்பது ஆகும். அதனால் அழகான ஒரு தடிக்காளை எப்பொழுதும் அவருடனேயேதான் இருக்கும். பார்ப்பதற்கு மனிதர்களைப் போல கழுத்தில் பித்தளை சங்கிலி, கொம்பில் வண்ணம், திருஷ்டிக்கான கருப்புக் கயிறு என்று ஜோடிப்பாகத்தான் இருக்கும் அந்தக் காளை. அதே போலத்தான் உணவுப் பழக்க வழக்கமும். காலையில் போகும் இடங்களில் இருக்கும் புல்வெளி, மதியம் பிண்ணாக்குடன் கூடிய கஞ்சித் தண்ணீர். இரவு வைக்கோலும் ஊர வைத்த தவிடும் பருத்திக்கொட்டையும். அந்தளவிற்கு அந்தக் காளை ரத்தத்தை முறித்து அதன் விந்துவாக அவர் கை காட்டுகின்ற பசுக்களின் மீதெல்லாம் பிடிக்கிறதோ இல்லையோ பாய்ந்து தான் கவனிக்கப்படுவதற்கு விலையாக்க வேண்டும். அது மட்டும்தான் அவர் எதிர்பர்ப்பது.
சமயத்தில் ஒரே நேரத்தில் ஒரு ஊரில் தொடர்ந்து ஐந்து பசுக்கள் கூட வந்துவிடும் இருந்தாலும் அது கடமையும் வேலையும் முழுநேரமும் அதுதானே. ஒரு பசுமாட்டிற்குக் காளை கட்டுவதற்கு அவர் 10 ரூபாய் என்று இருந்த காலத்திலிருந்து காளை கட்டிக் வந்திருக்கிறார். கடைசியாக 100 ரூபாய் வரை அவர் கட்டிக்கொண்டுதான் இருந்தார். அது மட்டுமல்ல பல ஊர்களுக்கு அவர் தொடர்ந்து இப்படியே போய் வந்துக் கொண்டிருப்பதால் அவரை வைத்துதான் அங்கிருக்கும் மாடுகளும் விலைப் பேசப்படும், விற்கப்படும். அதேப் போல் மாடுகளை விலைமதிப்பதிலும், சரியான நேரத்தில் விற்றுக் கொடுப்பதிலும் அவரைப்போல இடைத்தரகர் இல்லை என்றளவிற்கு அவருக்குப் பெயர் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனையோ மாட்டுத் தரகர்கள் இருந்தாலும் அவர் சொன்ன விலைதான் பெரும்பாலும் நிர்ணயமாகும். அந்தளவிற்கு மாட்டைப் பார்த்தாலே அதைப் பற்றிக் கணித்துவிடுவார்.
பொதுவாக ஒரு மாட்டை அவர் இடைத்தரகு செய்யப்போகிறார் என்றால் முதலில் மாட்டின் சுழிகளை எண்ணுவார். பின் மாட்டின் கொம்புகளில் உள்ள வளையங்களை தடவி எண்ணிப் பார்ப்பார். சுழிகளைக் கொண்டு அவற்றின் ராசியை அவரது அனுபவத்தில் கணித்துச் சொல்வார். விலை நிர்ணயத்தில் இந்த சுழிகளின் இடமும் எண்ணிக்கையும் நிச்சயம் பங்குப் பெறும். நெற்றியில் சுழியில் இருந்தால் அந்த மாட்டிற்கு ஏக கிராக்கி. முக்கிய ரகசியம் மாட்டின் கொம்பின் உள்ள வளையம் அவை ஈன்ற கன்றுகளின் எண்ணிக்கையை குறிக்கும். பொதுவாகவே இதை யாரிடமும் அவர் பகிர்ந்துக் கொள்ளவே மாட்டார். தொழில் ரகசியமாயிற்றே!
அதைக் கொண்டு மாடுகளின் வயதையும் அவர் கணக்கிட்டுக் கொள்வார். மேலும் அந்தக் கொம்பு வளையங்கள் தொடர்ச்சியான இடைவெளியில் இருந்தால் அவை தொடர்ந்துக் கன்றுகளை ஈன்றதற்கான அடையாளம். இல்லையெனில் சினைப்பிடிப்பதில் எதோ தாமதம் நிகழ்த்தும் மாடு என்று விலை குறைப்பு நடைப்பெறும். யாரும் இதைப்பற்றின விஷயங்களில் அவரிடம் பொய் சொல்லவே முடியாது. காரணம் அந்த தொழிலில் அனுபவம் அவருக்கு 50 வருடங்களுக்கு மேல். அதேப் போல் உடலோடு மடி நன்கு ஒட்டி மாசு மருவற்று இருந்தால் அதிகம் கறக்கும் மாடு என்பது அவருடைய மற்றொரு அனுபவக் கணிப்பு. மேலும் ஒரு பசு வாழ்நாளில் மூன்றாம் மற்றும் நாலாம் ஈற்றுக் கன்று போடும் போதூன் அதிக பாலைக் கறக்கும் திறனைப் பெறும். எனவே அந்த மாடுகளுக்கு தனி மவுசு. இதில் தனிச்சிறப்பு என்னவென்றால், எல்லாமே அவர் மட்டுமே அனுபவத்தால் அறிந்த தொழில் ரகசியம்.
அதேப்போல், அது என்ன ஜாதி மாடு, என்ன நிறம் என்பதைப் பொறுத்தும் விலை மாறுபடும். பொதுவாக வெள்ளை மற்றும் சிவப்பு நிற மாடுகளுக்கு நல்ல மவுசு. அதே போல் சீமை ஜாதி மாடுகளுக்கும் நல்ல விலையுண்டு. மனிதன் ஜாதி நிற வேறுபாட்டை தன்னோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தன் வணிக நோக்கத்திற்காக வைத்திருந்த பிரிவினைகள் அவையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் அவர்கள் பிரித்து வைத்திருக்கும் மாதிரி தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. எது எப்படியோ இவைகளைப் பின்பற்றிதான் பொதுவாகவே அவர் மாடுகளை இடைத்தரகு செய்துக் கொடுப்பார். சுற்றுவட்ட கிராமங்களுக்கும் அவரது உதவி நிதமும் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். எங்குப் பார்த்தாலும் கையில் காளை மாட்டைப் பிடித்துக்கொண்டு நடந்து சென்று கொண்டுதான் இருப்பார். எனவே மனைவி மக்கள் அனைவரையும் மாதத்திற்கு ஒரு முறையோ இருமுறையோதான் அவரால் பார்க்க முடியும். இப்படியே நாற்றாங்காலில் நடவு நட்டு அறுவடை ஆகும்வரை காளைமாட்டை ஒட்டிக்கொண்டு செல்லும் அவர் அறுவடை முடிந்ததும் கடையமாடு சேர்க்க ஆரம்பித்து விடுவார். ஆம், கடையமாடு சேர்த்தல் என்பது ஊரில் உள்ள அனைத்து பசுமாடுகளையும் அவர் ஓட்டிக்கொண்டுவந்து வயல்வெளிகளில் பொழுதிற்கும் மேய்த்துவிட்டு இரவில் ஓர் வயலில் அவைகளை வளைத்து வைத்துவிடுவார்.
அவைகளுக்கு மத்தியில் அவருடைய மைனர் ஆண்காளை மட்டும் ஜாலியாக சுத்தி வரும். அப்படி சுத்தி வரும் காளை பல பசுக்களை சினையாக்கிவிடும். ஒரு கிடையின் காலம் என்பது அடுத்து நிலம் உழுதுவிட்டு விதை விதைக்கின்ற காலம் வரையில். அதாவது சுமார் மூன்று மாதங்களும் அவருக்கு படுக்கையே அந்தந்த வயல்வெளிகளில்தான். தனக்கு உதவிக்கு இரண்டு மூன்று ஆட்களையும் சேர்த்து வைத்துக்கொள்வார். உள்ளூர் எல்லையைத் தாண்டிவிட்டால் அதுவும் கிடையாது. அந்த ஊர் முதலாளிகளின் கடை சாப்பாடுதான். பாத்திரம் கிடைத்தால் சமயத்தில் வயல்களில் அடுப்புக் கட்டி சமைத்தும் சாப்பிடுவார்.
அவ்வாறு மாடுகளை பல்வேறு ஊரிலிருந்து ஓட்டிவரும் அவருக்கு கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் அவர் அதை சிரமமாக ஒரு நாளும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. வீட்டில் கவனிக்கப்பட்ட அனைத்து மாடுகளும் வருடத்திற்கு ஒருமுறை அவருடனேயே அனுப்பி வைக்கப்படும். இதில் அவர்கள் யாரும் அவருக்கு பணம் தரமாட்டார்கள். இவரும் தரமாட்டார். பின்னர் எப்படி அவருக்கு சம்பாத்யம் கிடைக்கும். மாட்டை கிடைக்கு அனுப்புபவர்களுக்கு அவர்களின் மாடு தங்களின் நேரடி கவனிப்பு இல்லாமலேயே மாடு வளர்ந்து சினையாகிவிடக்கூடும். கொஞ்ச நாளைக்கு வைக்கோல் புல் மிச்சம் என்பதால் அவர் கடையமாடு போடும் தருணத்தை பெரும்பாலானோர் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்பர். அவ்வாறாக வருடத்திற்கு சுமாராக 100 மாடுகளுக்கு மேல் அவர் சேர்த்துவிடுவார்.
சிலர் தேடிக்கொண்டு வந்து தங்கள் மாடுகளை அவரிடம் சேர்த்துவிட்டுச் செல்வர். சிலர் வந்து அழைத்துக் கொண்டுப்போய் மாட்டை அவரிடம் அனுப்பியும் வைப்பார்கள். எப்படியும் அனைத்து மாடுகளும் ஒரு இடத்திற்கு வந்து சேர ஒருமாத காலம் ஆகிவிடும். இப்படியாகவே ஒன்று சேர்க்கப்பட்ட மாடுகள் அனைத்தும் அறுவடை செய்யப்பட்டு நிற்கும் வயல்வெளிகளில் மேய்க்கப்படும். அவ்வாறு மேய்க்கப்பட்டு இரவில் குறிப்பிட்ட ஒருவரின் வயலில் மாடுகள் அனைத்தும் தங்க வைக்கப்படும். இதற்கான கூலியாக அந்த வயல்காரர்கள் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு இவருக்கு கூலியாக அடுத்த அறுவடையின் பொது தரவேண்டும். அதுதான் காலம் காலமாக வயல்காரர்களுக்கும் அவருக்குமான நிபந்தனை. அதாவது நூறு மூட்டைகளுக்க ஒரு மூட்டை வீதம் என்றபடி கணக்கு வைத்துக் கொள்வார்கள். அதன்படி அவர் அறுவடை நாளில் வயல்காரர்களின் வீட்டிற்கு சென்று வசூல் செய்து அதை தனக்கு உதவியவர்களிடம் பங்கிட்டுக் கொள்வார். ஆகவே அவர் செய்யும் இந்த வேலைக்கு உடனுக்குடன் பணம் கூலி என்றெல்லாம் எதுவும் கிடையாது. இப்படி வசூல் செய்யும் நெல்லை விற்றால்தான் அவரால் அந்த மூன்று மாதத்திற்கு பிறகு கையில் காசையே பார்க்க முடியும்.
அதேப்போல் ஒருதடவை அவர் மாடுகளை திரட்டிவிட்டால் அந்த மூன்று மாதத்திற்கு அவரை ஓரிடத்தில் பார்க்கவே முடியாது. காரணம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊரிலிருந்து வெவ்வேறு வயல்காரர்கள் வந்து தங்கள் வயல்களில் கடை கட்ட முன்பணம் கொடுத்து சென்று விடுவார்கள். எனவே அந்த தினத்தில், அந்த மாடுகளை ஓட்டிக்கொண்டு அங்கு சென்றுவிட வேண்டும். இல்லையெனில் அடுத்தவரின் தினத்திற்கு பாதிப்பு வந்துவிடும். பெரும்பாலும் அனைத்து வயல்காரர்களும் தங்கள் வயலுக்கு இதைப் பயன்படுத்திக்கொள்வதால் மூன்று மாதங்களில் அனைத்து தினங்களும் முன்பதிவு தினங்களாகவே இருக்கும்.
அவ்வாறாக அந்த வயல்களில் மாடுகளை காலாற மேய்த்து, அவற்றை ஓய்வெடுக்க வைக்கும்போது அவற்றின் மூலம் கிடைக்கும் நேரடி சாணமும் கோமியமும் மண்ணிற்கு சிறந்த இயற்கை உரங்களாக அமைந்து அவ்வருட விளைச்சலுக்கு வழி வகுத்துவிடும். எனவே சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக விளைச்சல் வரவேண்டும் என்று எண்ணுபவர்கள் இரண்டு நாட்கள் அந்த வயல்களில் தங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வர். அவ்வாறு அவர்களின் வயல்வெளிகளில் அன்றிரவு மாடுகள் தங்கியதின் விளைவை அவர்களால் தலைகுனிந்து தொங்கும் கதிர்களால் அறிந்துக்கொள்ள முடியும்.
அவ்வாறாக ஒரு குறிப்பிட்ட வயலில் மாடுகளை இரவு தங்க வைப்பதற்கு அனைத்து மாடுகளையும் பொழுது சாய்கின்ற நேரத்திற்கு சரியாக அந்த வயலிற்கு ஓட்டிச்சென்று சுத்தோடு சுத்து நிற்கின்ற மாடுகளின் காலுகள் ஒன்றோடொன்று பிணைத்துக் கட்டப்பட்டு, படுக்க வைக்கப்படும். அவ்வாறு வைக்கப்படும் மாடுகள் அதற்கான கயிற்றை கழுத்தில் எப்பொழுதும் சுருளாக சுமந்துக் கொண்டுதான் திரியும். அதேப் போல் கிடையில் இருக்கும் மாடுகள் பிரிந்து செல்லாமல் இருப்பதற்காக கொஞ்சம் அடாவடியாக இருக்கும் மாடுகளைப் பார்த்து பெரிய காண்டா மணி கழுத்தில் தொங்க விடப்பட்டிருக்கும். அவ்வாறு தொங்கவிடப்பட்டிருக்கும் மணி அது சலாங்குடு அடித்து நகரப் பார்த்தால் காட்டிக் கொடுத்துவிடும். அதேப் போல் அந்தக் கடைக்கே உரித்தான சங்கீதத்தை அதன் நடையின் வாயிலாக ‘டங்’; ‘டடாங்’ என்று நடக்கும் போதும், தலையை ஆட்டி மேயும் போது ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மாடுகள் பொதுவாகவே அதிக நீரோட்டம் உள்ள இடங்களில்தான் உடல் குளுமைக்காக இரவில் படுத்து உறங்கும் என்பதால் எந்த இடத்தில் கிணறு வெட்டலாம் அல்லது போர் இறக்கலாம் என்பதையும் அவர்கள் இதை வைத்துக் கணித்தும் விடுவார்கள். அவ்வாறாக வயல் வைத்து இருப்பவர்களுக்கு இந்த கிடைத் திட்டம் மிகுந்த உதவியாக இருந்து வந்தது. சமயத்தில் மாட்டுக்காரர்களும் மாட்டை பிரிந்து இருக்க முடியாமல், மாடுகள் இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்துவிட்டுப்போவதும் உண்டு. அதுவரை கட்டப்பட்டே தனிமையில் வளர்ந்த மாடுகளுக்கும் அது ஒரு புது அனுபவமாகவும் இருக்கும். ஓரிரு தினங்களில் நட்பும் மலர்ந்து அணி அணியாகவும் அவை மேய்வதற்கு காலையில் கிளம்பிவிடும். எது எப்படியோ அந்த மாடுகளுக்கு அது ஒரு ஆனந்தமாகத்தான் இருக்கும். அவிழ்த்துவிட்டு சுதந்திரமாக கூட்டத்தோடு திரிகின்றனல்லவா? அது ஒருபுறம் இருக்கையில் மைனர் காளைவேறு ஒரு பக்கம் தனது வேலையை செய்துக்கொண்டே இருப்பார். விளைவு மாடுகள் ஒவ்வொன்றாக சினையாகிவிடும்.
இப்படியேதான் அந்த மூன்று மாதங்களையும் பாலு கழிப்பார் என்பதால் எந்த ஒரு விஷேசங்களிலும், துக்கத்திலும் அவரால் பங்கு எடுத்துக் கொள்ளவும் முடியாமல் போய்விடும். தன் மனைவியின் பிரசவத்திற்குகூட அருகிலிருந்து அவரால் கவனிக்க முடியாத நிலைமையெல்லாம்கூட வந்திருக்கிறது. எது எப்படியாயினும், அவர் அவர் வேலையை செய்துக் கொண்டுதான் இருப்பார். அவர் மனைவியும் ஒருபோதும் அதைப் பெரிதுப்படுத்தியதும் கிடையாது. அவள் வயிற்றில் பிள்ளையைச் சுமந்திருந்தாலும் அவளின் நினைவு முழுவதும் அவரைப் பற்றியேதான் இருக்கும். இதன் காரணமாகவோ என்னவோ அவரது மூன்று ஆண்பிள்ளைகளும் அவரது ஜாடையிலேயே இருப்பர்.
இதையே தொழிலாக 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்துவரும் அவர் படிப்பை பாதியில் விட்ட அவருடைய நடுமகனை மட்டும் அந்த தொழிலில் ஈடுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளையும், நேக்குப் போக்குகளையும் சொல்லிக் கொடுத்து வந்தார். அவனும் தன் தந்தைக்குப் பின் அதைப் பிராதன தொழிலாக எடுத்து பண்ணுவதற்கு முழு மூச்சோடு அதை கற்றும் வந்தான். அது என்னவோ அவனுக்கு அந்த வேலையை விட்டு வேறு எந்த வேலையிலும் நாட்டம் வரவில்லை. சிறுவயதிலிருந்தே அவனது தந்தையை கதாநாயகன் போல் பார்த்துவிட்டான் போலும்! மாடு மேய்ப்பதுதானே என்று சாதாரணமாகக் கருதினாலும் கதைநாயகனாகவும் கடவுளாகவும் கருதப்பட்ட கிருஷ்ணனே மஹாபாரதத்தில் அவ்வேலையை செய்திருக்கிறார் எனும்போது கொஞ்சம் யோசிக்கத்தான் தோன்றுகிறது.
வருடங்கள் ஓடின. அவருக்கும் வயது எழுபதைத் தாண்டிவிட்டது. முன்பு போல் நடக்கவும் இயலவில்லை. 21 ஆம் நூற்றாண்டும் பிறந்து நாகரிக வளர்ச்சியும் தலைத்தூக்க ஆரம்பித்தது. அனைவரும் இயற்கை விவசாயத்தின் மீதான நம்பிக்கையையும் கைவிட்டாலும் பரவாயில்லை, விவசாயத்தின் மீதே நம்பிக்கையை கைவிட்டு நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றிவிட்டனர். அதுசரி வயல்வெளிகளையும் விவசாயத்தையும் சுவாசித்த முதலாளிகள் சென்ற நூற்றாண்டோடு ஒழிந்துவிட்டார்கள் போலும்! இப்போது இருப்பவர்கள் எல்லாம் அனைத்தையும் வணிக நோக்கில் பார்க்கும் அந்த காலஞ்சென்ற விவசாய முதலாளிகளின் வாரிசுகள்தானே! வயல்களுக்கு இந்த நிலைமை எனும்போது மாடுகளைப்பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன! மாடுகளும் அறவே ஒழிந்துவிட்டன.
ஊருக்கு அங்குகொன்றும் இங்கொன்றுமாய்த்தான் மாடுகளும் இருந்தன. அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கூட்டினால் ஒரு கிடையின் பகுதிகூட வராது. கிடையின் நிலைமைதான் இப்படியென்றால் மாடுகளுக்கு காளை கட்டுவதற்கும் தட்டுப்பாடு. ஊரில் இருக்கின்ற ஒன்றிரண்டு மாடுகளுக்கும் செயற்கை முறையில் கம்பி ஊசியைப் பயன்படுத்தி அதன் புணர்ச்சி இன்பத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சினையாக்கி, அம்மாடுகளின் ஒரு உணர்ச்சியையே பிடுங்கி எடுத்துவிட்டனர் இந்த நூற்றாண்டின் மாமனிதர்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது தோன்றுவது ஒன்றுதான். மனிதன் எவ்வளவு பெரிய சுயநலமான கொடிய மிருகம்! நாளடைவில் காளை கட்டுவதும் ஒரு அரிதான விஷயமாய் மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
வயல்வெளிகளும் மாடுகளும் குறைந்ததுப் போலவே விளைச்சலும் நாளடைவில் குறைந்துவிட்டது. அதன் தரமும் குறைந்துவிட்டது. எல்லாம் செயற்கை ஆகிவிட்டபோது, இயற்கையான இந்த கிடை முறை செயல்படாமல் போனது. அவரது மகனுக்கோ வேறு எந்த வேலையும் பழக்கமில்லை; பழகவில்லை; தெரியாது. நெடுநாளாக சம்பாத்யம் இல்லமலேயே வீட்டில் இருந்தான். அவனுக்கு அடுத்த சின்னவனும் டிராக்டர் டிரைவராகி நாளுக்கு 500 சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான். பெரிய மகன் ஏற்கனவே விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப அறுவை இயந்திர ஓட்டுநராக பிரபலமாகிவிட்டான்.
செய்வதறியாது, யோசித்தார். கடந்த இரண்டு தலைமுறைகளாக எத்தனையோ காளைகள் இருந்து சென்றாலும் இப்போது இருக்கின்ற காளையுடன் அவர் மிகவும் நெருங்கி பழகி இருந்தார். ஆணாக பிறந்ததால் அடிமாட்டிற்கு செல்ல வேண்டிய அந்தக் கன்றை அவரது உறவினரிடத்தில் வாங்கி வளர்த்த கருப்பு நிற காளைதான் அது. எப்பொழுதுமே அவருக்கு அவரிடம் இருக்கும் காளைகளுக்கு பெயர் வைத்துப் பார்ப்பதில் ஒரு அளவற்ற மகிழ்ச்சிதான். அந்தவிதத்தில் அந்தக் காளைக்கு பெயர் ‘பார்த்திபன்’ என்றும் செல்லமாக வைத்திருந்தாhர். அவைகளையும் மனிதர்களைப் போல்தான் நடத்துவார். வீட்டிற்கு யாரேனும் வந்தால் அறிமுகப்படுத்தி வைப்பார். அதற்கென்று கொசுவத்தி, சிமெண்ட் தரை என்று சிறப்பான கவனிப்புதான். வெளியில் சென்று வந்தால் கையில் பருத்திக்கொட்டை பிண்ணாக்கு இல்லாமலும் வரமாட்டார்.
அதனால் வருகின்ற சம்பாத்யத்தில்தான் நாம் உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்பதால் 100 ரூபாய் அதற்காக செலவழித்துவிடுவார். ஆனால் சமீபகாலமாக அதற்கும் வழியில்லை. மாட்டை அழைத்துக்கொண்டு அவரது நடுமகன் வீதி வீதியாக அலைந்தாலும் 100 ரூபாய்க்குகூட வழியில்லை. இருந்தாலும் கடந்து 50 ஆண்டுகளில் அவரது வீட்டில் காளை இல்லாமல் இருந்ததே இல்லை. தன் நடுமகனையும் இப்படி வளர்த்துவித்துவிட்டோமோ, என்று வருந்திக்கொண்டே இருந்தார். நெடுநாள் யோசனையின் முடிவாக வேறு வழியின்றி காளையை விலைப்பேசி விற்க முற்பட்டார். அதற்கும் முடியவில்லை. ஆளானப்பட்ட கடையமாட்டுப் பாலுவின் விலையும், மாடும் முதன் முறையாக மதிப்பிழந்துப் போனது. இதே 10 வருடங்களுக்கு முன் பாலு வளர்த்தக் காளை என்று சொன்னாலேப் போதும் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குவார்கள். இப்பொழுது யாருமே வாங்கத் தயாராக இல்லை.
வேறுவழியின்றி முதன் முறையாக வளர்த்தக் காளையை அடிமாட்டிற்கு கண்ணீரும் கம்மளுமாக அனுப்பி வைத்தார். கிடைத்தப் பணத்தோடு மேலும் கொஞ்சம் பணம் சேர்த்து அவருடைய மகனை வெளிநாட்டிற்கு பயணம் அனுப்பி வைத்துவிட்டாரே தவிர, இரவெல்லாம் அவருக்கு பார்த்திபன் காளையை நினைத்து தூக்கமே கிடையாது. எது எப்படியோ ஊருக்கு அவர் நடையாய் நடந்தது எந்த லாபத்தை தந்ததோ இல்லையோ வயதான காலத்தில் நல்ல நிம்மதியை தந்திருந்தது. ஆம் சர்க்கரை நோய், மூட்டுவலி என்று எந்த பிரச்சனையும் அவரை அண்டவில்லை. ஆரோக்யம் தானே உண்மையான நிம்மதி. தன் கடைமைகளைத் தானே செய்துக்கொள்கிறார். நிஜமாகவே கொடுத்து வைத்த மனுஷன் இல்லையா?
நாளடைவில் கலாச்சார மாற்றத்தில் தொலைந்துப் போகிற மனிதர்களுக்கெல்லாம் கடையமாட்டுப் பாலு ஒரு குறியீட்டு மனிதர். கட்டாயம் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய நபர் என்றுத் தோன்றுகிறது. அவர் வைத்திருக்கும் தகவல்களும் அரிய பெரியன. அத்தனையும் அனுபவ அறிவுகள். அந்த தகவல்கள் ஏட்டில் ஏற்றப்பட வேண்டும் என்பதெல்லாம் ஒருவகையில் எதிர்காலத்திற்கான அத்தியாவசியம். எது எப்படியோ அந்த சுற்றுவட்டார வயல்வெளிகளில் மூன்று போக நல்ல விளைச்சலுக்குப் பாடுப்பட்ட அவரது கால்தடங்கள் என்றுமே பசி என்ற உணர்வு இருக்கும்வரை வணங்கத் தகுந்ததுதானே!
இருந்தாலும் நாகரிக வளர்ச்சியாலும் போகிற விஞ்ஞான வளர்ச்சியிலும் தன்னுடையத் தொழிலால் போட்டி போட முடியவில்லை என்று கட்டிலில் படுத்துக்கொண்டு, அவரது கடையமாட்டு அனுபவங்களை வருபவரிடமும் போகிறவரிடமும் பகிர்ந்துக்கொள்வதே அவரது தற்போதைய வாடிக்கையாகிவிட்டது. அவருடைய தலைமுறைகளைத் தவிர யாருக்கும் அவர் சொல்வது ஒன்றும் புரியாததால் அவர் ஏதோ வயது மூப்பில் புலம்புகிறார் என்றே சொல்லிக்கொண்டு செல்பவர்கள் பலர். யாருக்குத் தெரியும் அவரது புலம்பல்கள் ஒழிந்துப் போன ஒருவகையின் பசுமை, வெண்மைப் புரட்சியின் புலம்பல்கள் அழிந்துப் போன ஒரு கலாச்சாரத்தின் புலம்பல்கள் என்று!
-செல்லா செல்லம்
19-07-16 மாலை 6 மணி
இந்த சிறுகதை உங்களுக்குள் உணர்த்தும் கருத்துக்களை, கீழே உள்ள "Comment box"இல் பகிரவும். இந்த சிறுகதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவும் என்று தோன்றினால், தவறாமல் பகிரவும். நன்றி!!!
