அந்த மூன்று நாட்கள்
அந்த மூன்று நாட்களைப் பற்றி அவன் அறியாமலேயே இருந்தது ஆச்சரியம்தான். அதைப்பற்றின பாடத்திட்டத்தை வாத்தியார் நடத்தாமல் மாணவர்களை படித்துக் கொள்ள சொல்வதினால் வந்த அறியாமை என்று கூட அவனுக்கு சொல்லலாம். பாலியல் சார்ந்த கல்வி அடிப்படையானது. அவசியமானது. மனித வாழ்வில் இரண்டற கலந்த விஷயத்தை பற்றின சூட்சமத்தை திருட்டுத்தனமாகவும், தன்போக்கிலும் கற்றுக் கொள்ள முற்படும் போது பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த திருட்டுத்தனத்தின் பிள்ளையார் சுழியை சுற்றமும் போட்டுக் கொடுத்து விடுவதாக சில சமயங்களில் உணரும் படி தோன்றுகிறது.தனிமனித குற்றங்களுக்கு எப்பொழுதுமே சமூகம் என்று பொதுக் காரணம் சொல்வதை தவிர்க்க முடியாமலேயே போய்விடுகிறது. சமூகத்தில் தொடர்ந்து நடக்கும் பாலியல் குற்றங்கள், பாலியல் சார்ந்த புரிதல்களை எவ்வாறு பக்குவமாக குடும்பங்கள் தீவிர புரிதலோடு விவாதிக்க வேண்டும் என்பதையே கோரி நிற்கிறதாகத் தென்படுகிறது. அந்த விவாதம் முதலில் யாரிடம் இருந்து துவங்க வேண்டும் என்பது குடும்பங்களில் கேள்விக்குறியாக இருந்து இருந்தே இலைமறைக்காயாய் தவறான புரிதல்கள் வளர்த்து விடப்பட்டிருக்கிறது. ஒளிவு மறைவுகளை விளக்க வேண்டிய சூழலை குடும்பத்திலிருந்து தொடங்குவது மிகப்பெரிய பலம். எல்லா தாய் தகப்பனும் உணர வேண்டிய உண்மை. அவனுக்கு அப்படியில்லை.
.……..
அம்மா.
அம்மாவின் அரவணைப்பில் தூங்குவதில்தான் பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகப்பிரியம். அவனுக்கும் அப்படிதான். அம்மாவின் அரவணைப்பில் இருக்கிற கத கதப்பு கடந்த நாற்பது வருடங்களில் எங்கு தேடியும் கிடைத்த பாடில்லை என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. எங்கேயும் ஒப்பிட முடியாத உணர்வு என்று அவன் மனம் பின்நாட்களில் நினைத்தது உண்டு. எந்தவித ரதவாத உணர்வும் வரையறுக்க இயலா உணர்வு அது. அம்மா, அம்மாவின் மடி எல்லாம் அவனுக்கு விருப்பம். அந்த மூன்று நாட்களில்கூட அம்மாவின் மடிக்காக அடம் பிடித்த நாட்களில் அவனது அடம் வளர்ந்து நின்றிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அம்மா திடீரென தீட்டென்றால் ஒத்துக் கொள்ளவே மாட்டான். அவள் தூரத்து தாத்தா இறந்து விட்டார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறாள். நம்பாமல் அம்மா அருகேதான் தூங்க செய்வான். வீட்டிற்கு தூரம் என்றால் எவ்வளவு தூரம் என்று மழலைமொழியில் கேட்டிருக்கிறான். ஆக மாதம் ஒரு தாத்தாவையோ அல்லது தூரத்து உறவினரையோ கொல்ல வேண்டிவரும் அல்லது வேறு ஒரு காரணத்தை தேடவேண்டி வரும் என்பது கூடுதல் சவாலான தகவல். வளர்ந்தபின் அந்த நாட்களில் நேரத்திற்கு சாப்பாடு கேட்டு தொந்தரவு செய்திருக்கிறான். துணிகளை ஏன் துவைக்கவில்லை என்று கடுஞ்சொல் வீசி முகத்தில் துணியையும் பலமுறை வீசியெறிந்து இருக்கிறான். எல்லாவற்றிற்கும் அம்மா பொறுமை, மௌனம்தான். விளக்கம் ஏதும் கொடுக்க மாட்டாள். ஏன் , கொடுக்க முற்பட்டதே இல்லை. காரணம் அவள் அவனுக்கு அம்மா!
……..
மக்கு அவன்.
அக்காவின் முகம் வயிற்றுவலியின் பிரதிபலிப்பை முகமூடியாய் சூழ்ந்து நிற்பதைக்கூட அறிய இயலா மக்கு அவன். அவன் மனச்சுருக்கத்தையே முகச்சுருக்கத்தை வைத்து கணிப்பவள் அவள். மக்கை பாசம் காட்டி பாசம் காட்டி வளர்த்த அக்காவின் வயிற்றுவலி சமயத்தில் “நடிக்காதடி” என்று நகையாடிய தருணங்கள் அவனுக்கு ஏராளம். எல்லாம் வேலை செய்ய பயந்து கொண்டு போடும் வேஷம் என்று அம்மாவிடம் போட்டுக் கொடுப்பதில் சுகம் அவனுக்கு. அப்பொழுதெல்லாம் விடலைப்பருவம். காதல் முளைக்காத பருவம். மீசை அரும்பு மட்டுமே தட்டியிருந்த பருவம். அதை ஆராய அவனுக்கு பொறுமை இல்லை. “எப்ப பாரு வயித்து வலி… வயித்து வலின்னு… படுத்துக்கிட்டு”, என்று கடுமையாக நடந்துக் கொண்ட பல தருணங்கள் உண்டு. அன்றைய தினங்களில் அவனை அம்மாவிற்கு சமையல் ஒத்தாசைகளை அவள் செய்ய கோரினால் இன்னும் ஏராள வஞ்சனைகள்.
……..
காதல்.
அந்த மூன்று நாட்களின் மீது ஆர்வம் கூடியிருந்தது, எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. அதைப்பற்றின விசாரணையை காதலியிடம் செய்வதற்காகவே நண்பர்களிடமும் இணையத்திடமும் பழக வேண்டியிருந்தது. காதலியிடம் அதைப்பற்றின உரையாடலின் நீட்சி காமத்தில் போய் முடியும் என்ற நண்பன் ஒருவனின் அறிவுரையை முழுமையாய் நம்பியிருந்தான். அதன் பேரில் அதில் தொடங்கிதான் அடுத்தடுத்த கதைகளுக்கு அவன் நகர்த்திக் கொண்டுப் போகும்படி இருந்தது. ஆனால் அந்த மூன்று நாட்களில் அதிக சண்டைகள்தான் நேர்ந்தன. அதுமாதிரியான சண்டைகளினால் பிரிவும் நிச்சயமானது. காரணம் அந்த நாட்களில் அவளின் மௌனம், முகம் சிரித்துப் பேசாமை அவனை சந்திப்பதைத் தவிர்த்தல் என எல்லாம் அவனை அலட்சியப்படுத்துவதின் குறியீடாக தோன்ற, முடிவு காதல் முறிவு.
……..
திருமணம்.
வீட்டில் பார்த்து வைத்தப் பெண். அந்த மூன்று நாட்களின் மீது வெறுப்பு கூடியிருந்தது. காரணம் அவளைப் பிரித்து வைத்திருந்தது. அந்த நாட்களில் உடலுறவு கொள்ள முடியவில்லை என்ற கோபம். அதிருப்தி. பெண்ணாகப்பட்டவள் ஆணுக்கான பாலியல் பிண்டம், பண்டம் என்பது அடிமனதில் ஊறிப்போயிருந்தது. விளைவின் வெளிப்பாடு ஏதோ ஒரு நீலப்படத்தைப் பார்த்துவிட்டு நீளமாக செய்ய வேண்டும் என்ற பல்வேறு சோதனை முயற்சிகளின் சித்ரவதைகளுக்கு மன்னனாகியிருந்தான். எல்லாம் மோகம், தாகம். நீலப்படங்கள் விதைக்கிற வித்தியாச அனுபவங்களை நடைமுறைப்படுத்தும் சாமர்த்தியசாலியானதில் மனைவியை அந்த
மூன்று நாட்களில் வற்புறுத்தியது அதீதம்.
……..
இரண்டு மகள்கள்.
ஆரம்பத்தில் வாரிசுக்காக ஆண்பிள்ளை இல்லை என்று மனைவியிடம் அதிருப்தியில் இருந்திருந்தான். ஆனாலும் பெண் பிள்ளைகளிடத்தில் கொள்ளைப்பிரியம். உலகத்தில் எந்த தகப்பனும் கொடுத்துவிட முடியாத மாதிரி செல்லத்தோடு வளர்த்துவிடவேண்டும் என்பது தீராஆசையாக இருந்தது. சமூகமே தடையாய் இருப்பதாய் தோன்றியது. முற்போக்குத்தனம் முட்டிக் கொண்டு வந்தது. எல்லா தகப்பனையும்போல் சராசரி ஆசையாக இருந்துவிடகூடாதென்பதில் மனைவியிடமே சண்டை அவ்வப்பொழுது நிகழும்தான். அந்த ஒருநாள் மனைவி வெளியே சென்றிருந்த சமயம் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பனிரெண்டு வயது மூத்தவள், திடீரென அம்மா என கதறி வயிற்றைப் பிடிக்க அனிச்சையாய் ஓடி தூக்கிப் பிடித்து அணைத்த அந்த நொடி என்ன கனம்! மூன்று தலைமுறை பெண்கள் உணர்த்த முடியாத வலியை உணர்ந்த தருணம் அது. எப்பா! தாயின் கதகதப்பு. நெஞ்சம் படபடத்தது. விழிநீர் சுரந்தன. கண்களால் எந்த உணர்வைதான் மறைக்க முடிந்தது! மன்னிப்பு கேட்க வேண்டும் போல் ஓர் உணர்வு தலைத்தட்டியது. அருகில் யாருமே இல்லை.
……..
-செல்லா செல்லம்
18-12-19 / 3.15M to 4.10 PM
இந்த சிறுகதை உங்களுக்குள் உணர்த்தும் கருத்துக்களை, நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை கீழே உள்ள "Comment box"இல் பகிரவும்.
இந்த சிறுகதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவும் என்று தோன்றினால், தவறாமல் பகிரவும்.
நன்றி!!!

